மக்கள் அமைதியான போராட்டங்களில் ஈடுபட வேண்டும்: இலங்கை அதிபர் வேண்டுகோள்

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவிப்புக்குள்ளான மக்கள் புரட்சி போராட்டத்தில் ஈடுபட்டு அதிபர் பதவியில் இருந்த கோத்தபய ராஜபக்சேவை விரட்டியடித்தனர். இதையடுத்து புதிய அதிபராக பாராளுமன்றம் மூலம் ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றார்.

அவருக்கும் போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ரணில் விக்ரமசிங்கே அதிபராக பதவியேற்ற மறுநாளே அதிபர் மாளிகை முன்பு இருந்த போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். அவர்கள் தங்கி இருந்த கூடாரங்களை போலீசார் அகற்றினர். போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில் அமைதியான போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என்று அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- நாட்டின் சட்டத்தின்படி அனைவருக்கும் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அனுமதி உள்ளது. போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கும் அதே உரிமை உண்டு.

நாட்டின் அமைப்பை மாற்ற வேண்டும் என்பதே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களின் கோரிக்கையாக உள்ளது. அதனை நானும் ஏற்றுக்கொள்கிறேன். நாடு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் வேளையில் அதிபராக பதவியேற்றுள்ளேன். பொருளாதார சவால்களை முறியடித்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல பல நடவடிக்கைகளை எடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் இலங்கைக்கு உடனடி நிவாரணம் வழங்க இந்தியா முன்வந்துள்ளதற்கு அமெரிக்க சர்வதேச உதவி நிறுவனத்தின் தலைவர் சமந்தா பவர் பாராட்டு தெரிவித்துள்ளார். 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள சமந்தா பவர் கூறும்போது, ‘இந்தியா ஏற்கனவே 16 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான மனிதாபிமான உதவிகளை இலங்கைக்கு வழங்கியுள்ளது. எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கடனை வழங்கியதற்காக இந்தியாவை பாராட்டுகிறேன்.

சீனா, இலங்கையை கடன் வலையில் சிக்க வைத்துள்ளது. 2000-ம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து இலங்கைக்கான கடன்களை வழங்குவதில் சீனா பிரதானமாக இருந்து வருகிறது. இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு அவசியமான காரணியாக இருக்கும் சீன கடனை மறு சீரமைப்பதில் சீனா சாதகமாக பதில் அளிக்காது என கருதுகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here