பத்து பகாட், ஆகஸ்ட் 13 :
இங்குள்ள செங்காராங்கில் உள்ள கம்போங் பாரிட் காசி சயாங்கில், மூன்று நாட்களுக்கு முன்பு 79 வயது மூதாட்டி ஒருவர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள செம்பனைத் தோட்டத்திற்கு சென்றபின் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பத்து பகாட் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் இஸ்மாயில் டோலா கூறுகையில், கடந்த புதன்கிழமை இரவு 11 மணியளவில் பைனா சிவன் என்பவர் காணாமல் போனதாக அவரது மகன் புகார் அளித்துள்ளார்.
அன்றைய தினம் பிற்பகல் 3.30 மணியளவில் குறித்த பெண் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
காவல்துறையினர், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் அவரைத் தேடுறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர், ஆனால் அந்த மூதாட்டி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை, இன்றும் தேடுதல் தொடர்கிறது என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சிம்பாங் ரெங்காமில் உள்ள பொது நடவடிக்கைப் படையின் 6வது பட்டாலியன், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மற்றும் மலேசிய தன்னார்வப் படைத் துறை (RELA) உட்பட ரோயல் மலேசிய காவல்துறையைச் சேர்ந்த 187 அதிகாரிகள் மற்றும் தனிநபர்கள் இந்தத் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.