சியோல், செப்டம்பர் 9 :
தென் கொரிய நகரமான போஹாங்கில் வீசிய ஹின்னம்னோர் என்ற சூறாவளியைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தின் போது, நிலத்தடி கார் நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.
பாதிக்கப்பட்டவர்கள் தமது காரை நகர்த்துவதற்காக அங்கு சென்றதாகவும், ஆனால் அவர்கள் பலத்த நீரோட்டத்தில் சிக்கிக் கொண்டதாகவும் பிபிசி செய்தி தெரிவித்துள்ளது.
12 மணி நேரத்திற்கும் மேலாக அங்கிருந்த கூரைக் குழாயில் ஒட்டிக்கொண்டு உயிர் பிழைத்ததாகக் கூறப்படும், இரண்டு பாதிக்கப்பட்டவர்களை மீட்டதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
இந்த வார தொடக்கத்தில் தென் கொரியாவை தாக்கிய மிக வலிமையான புயல் ஹின்னம்னர்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கிட்டத்தட்ட முழுவதுமாக நீரில் மூழ்கிய அடித்தளத்திற்குள் நுழைய, மீட்புப் பணியாளர்கள் பல மீட்டர் உயரத்திற்கு மூடியிருந்த தண்ணீருக்குள் சென்று, பாதிக்கப்படடவர்களை மீட்டனர்.
Yonhap செய்தி தளத்தின்படி, பாதிக்கப்பட்ட ஒன்பது பேரும் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் வசிப்பவர்கள்.
செவ்வாய்கிழமை காலை வாகன நிறுத்துமிடத்தில் இருந்து வாகனங்களை நகர்த்துமாறு நிர்வாக அலுவலகம் கூறியது. அதன் காரணமாகவே அவர்கள் அங்கு சென்றனர்.
உயிர் பிழைத்த 30 வயதுடைய ஒரு ஆணும், 50 வயதுடைய ஒரு பெண்ணும், தற்போது நல்ல நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நீரில் மூழ்கிய சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து, அந்நாட்டு அதிபர் யூன் சுக்-யோல் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியதுடன், இது ஒரு பேரழிவு என்று கூறினார். இந்த சோகத்தால் நேற்று இரவு என்னால் தூங்க முடியவில்லை, என்றார்.