மாஸ்கோ, :ரஷ்ய பள்ளியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஏழு மாணவர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 21 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மர்ம நபர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.ரஷ்யாவின் மத்திய பகுதியில் உள்ள இசேவ்ஸ்க் நகரில் இருக்கும் ஒரு பள்ளிக்கு, மர்ம நபர் ஒருவர் காலை வந்தார். உள்ளே நுழைந்த அவர், திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, மாணவர்களை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினார்.
குண்டு பாய்ந்த பல மாணவர்கள் சுருண்டு விழுந்தனர். மற்றவர்கள் தலைதெறிக்க ஓடினர். பின், அந்த நபர் தன்னைத் தானே சுட்டு உயிரிழந்தார். அவரது சட்டையில், ‘நாஜி’ சின்னம் பொறிக்கப்பட்டு இருந்தது.தகவல் அறிந்து வந்த போலீசார், காயம் அடைந்து கிடந்த 21 பேரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஏழு மாணவர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாக போலீஸ் அறிவித்துள்ளது. விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.





















