நாட்டின் 15ஆவது பொதுத்தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள இந்நிலையில் தேசிய முன்னணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அம்னோ உதவித் தலைவர் டத்தோ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், தாம் களமிறங்கும் பெரா நாடாளுமன்றத் தொகுதியில் மக்களின் பேராதரவைப் பெற்றுள்ளதாக பல தரப்பட்ட ஊடகங்கள் நடத்திய கருத்துக் கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
நாட்டின் 9ஆவது பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கடந்த ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் தற்சமயம் நாட்டின் பராமரிப்பு பிரதமராக செயலாற்றி வருகின்றார்.
இந்நிலையில் அவர், கடந்த 2004ஆம் ஆண்டு முதல் பெரா நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி வருகின்றார். இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பிரதமராக இருக்கின்ற காலத்திற்கு முன்னதாக தொடங்கியே இந்திய சமூகத்திற்கு நிறைய உதவிகளை செய்து வந்துள்ளதாக பெரா தொகுதி ம.இ.கா. தலைவர் முருகன் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, பல்வேறு நிலப் பிரச்சினைகளில் அவர் நேரடியாகவோ மறைமுகமாகவோ தலையிட்டு பல வழிகளில் உதவி செய்து தீர்வு கண்டுள்ளார்.
பெரா தொகுதியைப் பொறுத்தவரையில் முதன்மை தொழில் துறையாக இருப்பது விவசாயம்தான். அந்தத் தொழில் துறையிலும் இந்தியர்களுக்கு அவர் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றார்.
மேலும், கல்வியிலும் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், பல்வேறு உருமாற்றங்களை செய்து தந்துள்ளார்.
ஒரு காலகட்டத்தில் திரியாங் பகுதியில் இணைப் பள்ளிக்கூடமாக இருந்து வந்த சுழலில் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் ங்ப்ரி யாக்கோப், நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற பிறகுதான் இந்தியர்களுக்கென ஒரு தமிழ்ப்பள்ளியைக் கட்டி தந்தார் என்றும் முருகன் விவரித்தார்.
அது மட்டுமன்றி கெமாயான் சட்டமன்றத் தொகுதியில் வேறு பள்ளிக்கூட கட்டடத்தில் இயங்கி வந்த தமிழ்ப்பள்ளியை முழு பள்ளிக்கூடமாக செயல்பட புதிய கட்டடங்களை எழுப்பித் தந்தார்.
மேலும், வேலை வாய்ப்புகள் குறித்தும் அவரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டபோது, அதற்கும் அவரின் இயன்ற உதவிகளை தொடர்ந்து செய்து வந்துள்ளார்.
இதுபோல் அவர் பல்வேறு நலத் திட்டங்களையும் உதவிகளையும் செய்து வருகின்றார். பிரதமராக பொறுப்பேற்ற பிறகும் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், நாடு தழுவிய அளவில் இந்திய சமூகத்திற்கு பல்வேறு நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தி அதை செயல்படுத்தியது அனைவரும் அறிந்ததே.
எனவே, பெரா நாடாளுமன்றத் தொகுதியில் நான் இருப்பது எனக்குப் பெருமை அளிப்பதாக முருகன் கூறியுள்ளார்.
தொடர்ந்து, டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், தேர்தல் காலமட்டுமன்றி எல்லா நேரங்களிலும் மிகவும் தன்னடக்கத்துடன் இருப்பார் என்று 44 வயதான முகமட் ரிட்சுவான் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
பெரா பகுதியிலுள்ள மசூதியில் தொழுகைக்கு வரும் பராமரிப்பு பிரதமர் அங்கு இருக்கும் மக்களுடன் வழக்கமாக உரையாடுவார் எனவும் அந்த மசுதிக்கு எதிர்புறம் காஃபே நடத்திவரும் ரிட்சுவான் குறிப்பிட்டுள்ளார்.
டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிற்கு பல்வேறு தகுதி கூறுகள் உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, எனது தந்தை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பிறகு ஒரே ஆண்டில் இருமுறை வீட்டிற்கு வந்து நலம் விசாரித்தது அவரின் பெருந்தன்மையை வெளிக்காட்டுவதாக ரிட்சுவானின் மனைவி தெரிவித்தார்.
அவர் எங்கள் வீட்டிற்கு வரும்போது, நாங்கள் அமர்வதற்கு நாற்காலி வழங்கினாலும் அவர் தரையில்தான் அமர்ந்தார். நோய்வாய்ப்பட்டிருக்கும் நபர்களை அவர் அடிக்கடி சென்று பார்ப்பார்.
மக்களுக்கு சேவை செய்வதுதான் அவரின் நோக்கமாகும். பெரா தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் பொறுப்பேற்ற பிறகு இப்பகுதியின் கட்டமைப்பில் மேம்பாடுகளைக் கொண்டு வந்தார். குறிப்பாக, சீரான சாலைகள், புதிய மருத்துவமனை, ஷரியா நீதிமன்றம் ஆகியவை அதில் அடங்கும்.
அதற்கு முன்னதாக பெரா சுற்றுவட்டாரப் பகுதி வசிக்கும் மக்களுக்கு நோய்வாய் ஏற்பட்டால் அவர்கள் தெமர்லோ நகருக்குத்தான் செல்ல வேண்டும் என்றும் நூர் ஹிடாயா சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து முன்னதாக ஒவ்வோர் ஆண்டு இறுதியிலும் பருவ மழை வரும் போது பெரா பகுதிக்குள் வருவதற்கான சாலையில் வெள்ளம் தேங்கும். இதனால் பெரா பகுதியின் போக்குவரத்துகள் தடைப்படக் கூடும். ஆனால், டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் முன்னெடுத்த சாலை சீர்படுத்தும் பணிகளால் இந்த பாதிப்புகள் தற்போது இல்லை என்று முகமட் ஃபஸ்ரில் கூறினார்.
பெரா பகுதி வாழ் மக்கள் பொதுவாக டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் ஆதரவாளர்களாகவே இருப்பர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு தொடக்கத்தில் வெள்ளம் ஏற்பட்டபோது பாதிப்படைந்தவர்களுக்கு அவர் போதிய நிதி உதவி வழங்கினார். அண்மையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்திய சமூகத்தினருடன் கொண்டாடத்தையும் நடத்தினார். எங்கள் நகரம் தற்போது மேம்பாடு கண்டுள்ளது. இது பல வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தருவதாக முகமட் ஃபஸ்ரில் கருத்துரைத்தார்.
(இதில் சில தகவல்கள் சிஎன்ஏ ஊடகத்திலிருந்து எடுக்கப்பட்டவை)