பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சிக்கு வந்தால் நலத்திட்டங்களுக்கு 10 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படும் முஹிடின் உறுதி

கோலாலம்பூர், நவ. 8-

வரும் பொதுத்தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் வெற்றிபெற்று அரசாங்கம் அமைத்தால் பல்வேறு நல – உதவித் திட்டங்களுக்காக 10 பில்லியன் ரிங்கிட்டிற்கும் மேல் நிதி ஏற்பாடு செய்து தரப்படும் என்று அக்கூட்டணித் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் உறுதியளித்தார்.

விவசாயம், தொழில்நுட்பம், பள்ளி, சுற்றுச்சூழல் என பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி இந்நலத் திட்டங்கள் இருக்கும். குறிப்பாக உயர்நிலை தொழில்நுட்பத்துறையில் முதலீடுகளை ஊக்குவித்து வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர 5 பில்லியன் சிறப்பு நிதி ஏற்பாடு செய்துதரப்படும்.

இது தவிர மைக்ரோ, சிறு, நடுத்தர தொழில்துறையினர் நவீன மயத்திற்கு நகர்வதை ஊக்குவிக்கவும் திட்டங்கள் ஏற்பாடு செய்து தரப்படும். அதேசமயம் பொருளாதாரச் சவால்களை எதிர்நோக்கும் இத்தரப்பினருக்கு மொரோடோரியம் எனப்படும் கடன் ஒத்திவைப்பும் ஏற்பாடு செய்துதரப்படும் என்றார் அவர்.

நாங்கள் ஆட்சி அமைத்தால் வரும் ஆண்டுகளில் ஒரு மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் இலக்கு கொண்டுள்ளோம். இதன் அடிப்படையில் நாங்கள் வெற்றிபெற்ற பிறகு முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் வாழ்வாதாரச் செலவின விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

இது தவிர பொதுச் சேவைப் பணியாளர்களுக்கும் மாதாந்திர வாழ்வாதார அலாவன்ஸ் தொகையில் 100 ரிங்கிட் அதிகரிக்கப்படும். மக்களுக்குப் பொதுவாக உதவித் தொகை, இதர உதவிகளை ஒருங்கிணைக்க பிரத்தியேக அமைப்பையும் உருவாக்க பெரிக்காத்தான் நேஷனல் திட்டமிட்டுள்ளது என்றும் முஹிடின் விவரித்தார்.

இந்நிலையில் உணவு உற்பத்தியை அதிகரிக்கவும் உணவுப் பொருள் விலையை நிலைநிறுத்தவும் உணவு நிதித் திட்டத்திற்கு ஒரு பில்லியன் ரிங்கிட் மானியம் ஒதுக்கவும் பெரிக்காத்தான் நேஷனல் உறுதியளிக்கின்றது.

மேலும் விவசாயிகள் நெல் கதிர், விதைகளை வாங்குவதற்கு உதவும் வகையில் 1,200 ரிங்கிட் உதவித்தொகை ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும். அதோடு மழைக்கால உதவித் தொகையாக சிறுதோட்ட விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை 800 ரிங்கிட் வழங்கப்படும்.

பூமிபுத்ரா பிரிவினருக்கு 5 ஆண்டுகளில் விவசாய உற்பத்தி வெளியீட்டினை ஊக்குவிக்கும் வகையில் ஒரு பில்லியன் ரிங்கிட் தொழில்முனைவர்களுக்கு ஒதுக்கப்படும்.

இது தவிர பூர்வக்குடி மக்களின் முன்னேற்றத்திற்கும் பெரிக்காத்தான் நேஷனல் திட்டம் வைத்திருப்பதாக முஹிடின் யாசின் குறிப்பிட்டார். அந்தப் பிரிவு மக்களின் அடிப்படை கட்டமைப்பு, கல்வி, சீகாதாரப் பராமரிப்பு, பொருளாதார வாய்ப்புகள் அம்சத்தில் மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளன.

இதற்கிடையே நாடு தழுவிய அளவில் பள்ளிகளின் பராமரிப்புக்கும் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் 2.5 பில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கும். சபா சரவாக் மாநிலங்களில் உள்ள புதிய அரசாங்கப் பல்கலைக்கழகங்களிலும் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகளை உறுதிசய்வதற்கான வியூகத் திட்டங்களும் வழங்கப்படும் என்று முஹிடின் மேலும் உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here