ஓரியன் விண்கலம் பூமியை புகைப்படம் எடுத்து அனுப்பியது

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கடந்த 1969-ம் ஆண்டு முதன் முறையாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது. இந்நிலையில் மீண்டும்  மனிதர்களை  நிலவுக்கு அனுப்புவதற்கான, ‘ஆர்டெமிஸ்’ திட்டத்தை நாசா துவங்கியது. 2025-க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்பவது அந்த திட்டத்தின் இலக்காகும்.

மனிதர்களை நிலவுக்கு கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஓரியன் விண்கலத்தை ஆட்கள் இன்றி நிலவுக்கு அனுப்பி சோதனை செய்ய நாசா திட்டமிட்டது. இந்த திட்டம் ‘ஆர்டெமிஸ்-1’ என அழைக்கப்படுகிறது. அதன்படி எஸ்.எல்.எஸ். ராக்கெட் மூலம் ஓரியன் விண்கலத்தை நிலவுக்கு அனுப்புவதற்கான முதல் முயற்சி கடந்த ஆகஸ்டு மாத இறுதியில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ராக்கெட் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு, எரிபொருள் கசிவு மற்றும் சூறாவளி தாக்கும் அபாயம் போன்ற காரணங்களால் ‘ஆர்டெமிஸ்-1’ திட்டம் 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் நாசா விஞ்ஞானிகள் எரிபொருள் கசிவை சரிசெய்தனர். அதை தொடர்ந்து நீண்ட போராட்டத்துக்கு பின் எஸ்.எல்.எஸ். ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.   9 மணி நேர பயணத்திற்கு பின், சுமார் 57 ஆயிரம் மைல் தொலைவில் இருந்து ஓரியன் விண்கலம் பூமியை புகைப்படம் எடுத்து அனுப்பி உள்ளது. 1972-ம் ஆண்டுக்கு பின், நிலவுக்கு செல்லும் விண்கலம் ஒன்று பூமியை புகைப்படம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓரியன் விண்கலத்தில் 16 கேமராக்கள் பொருத்தப்பட்டு, காட்சிகள் பதிவு செய்யப்படுகின்றன. வரும் நவம்பர் 21 மற்றும் 25-ம் தேதி, நிலவின் மேற்பரப்புக்கு அருகில், சுமார் 60 மைல் தொலைவில் செல்லும் ஓரியன் விண்கலம், டிசம்பர் 11-ம் தேதி பூமிக்கு திரும்பவுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here