பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தனது முன்னோடிகளில் யாரும் செய்யாததை துணிச்சலுடன் செய்து, கல்வி அமைச்சகத்தை வழிநடத்த இரண்டு பெண்களின் பெயரை அறிவித்திருக்கிறார். மலேசியாவின் முதல் பெண் கல்வி அமைச்சராக அன்வார் ஏற்கனவே பிகேஆர் வனிதாவின் தலைவரான ஃபத்லினா சிதேக்கை நியமித்தார்.
இருப்பினும், அவர் இன்று ஒரு படி மேலே சென்று, டிஏபி தலைவர் லிம் குவான் எங்கின் சகோதரியான தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் ஹுய் யிங்கை துணைத் தலைவராக அறிவித்துள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக, இரு பெண்களும் முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினர்களாகி உள்ளனர்.
ஃபத்லினா இஸ்லாமிய குடும்பச் சட்டம் மற்றும் குழந்தைகள் நலனில் நிபுணத்துவம் பெற்ற சமூக ஆர்வலராகவும் வழக்கறிஞராகவும் அனுபவம் பெற்றவர்.
அவர் அன்வாரால் நிறுவப்பட்ட முஸ்லீம் இளைஞர் அமைப்பான மலேசிய இஸ்லாமிய இளைஞர் இயக்கத்தின் (Abim)முன்னாள் தலைவர் மறைந்த டாக்டர் சித்திக் ஃபட்ஜிலின் மகள் ஆவார்.
ஹுய் யிங் டிஏபி மத்திய செயற்குழு உறுப்பினர் மற்றும் பினாங்கு டிஏபி செயலாளராக உள்ளார். அவர் ஆகஸ்ட் 2018 இல் செனட்டராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.