சீனாவில் ஒரேநாளில் 3.70 கோடி பேருக்கு கொரோனா; வெளியான அதிர்ச்சி தகவல்

சீனாவின் உகான் மாகாணம் ஹூபேய் நகரில் கடந்த 2019 டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலகம் முழுவதும் பரவிய கொரோனா லட்சக்கணக்கான மக்களின் உயிரை பறித்தது. இந்த கொடூர வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து வைரஸ் பாதிப்பு, உயிரிழப்பு பெருமளவு குறைந்துள்ளது. அதேவேளை, கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பரவத்தொடங்கி வருகிறது.

தடுப்பூசி கண்டுபிடிப்பு காரணமாக உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு சுமூக நிலைக்கு திரும்பி விட்டன.

இதனிடையே, கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட சீனாவில் ஆரம்பம் முதலே பாதிப்பு, உயிரிழப்பு எண்ணிக்கையில் உலக நாடுகளுக்கு சந்தேகம் எழுந்து வருகிறது.

இந்தநிலையில், சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. சீனாவில் ஊடகங்கள் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதாலும், வெளிநாட்டு ஊடகங்களின் செயல்பாடுகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் இருப்பதாலும் சீனாவில் கொரோனா பரவல் குறித்த உண்மை தகவல் இதுவரை வெளிவராமல் இருந்தது.

சீனாவில் கொரோனா பரவல் உச்சபட்ச வேகம் எடுத்துள்ள தகவல் தற்போது உலகின் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஊடரங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் 3 ஆண்டுகால ஊரடங்கு கட்டுப்பாடுகளை சீனா தளர்த்தியது. அதன் பின்னர் அசுர வேகத்தில் சீனாவில் கொரோனா பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக வெளியான தகவல் பின்வருமாறு:- சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் குறித்து கடந்த புதன்கிழமை அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையத்தின் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது. இதில், இந்த வாரத்தில் ஒட்டுமொத்த சீனாவில் அதிகபட்சமாக ஒரேநாளில் 3 கோடியே 70 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இம்மாதத்தில் 1-ம் தேதி முதல் கடந்த 20-ம் தேதி வரை ஒட்டுமொத்தமாக சீனாவில் 24 கோடியே 80 லட்சம் பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த கூட்டம் தொடர்பான விவாத அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு ஒட்டுமொத்த சீன மக்கள் தொகையில் 18 சதவீதம் ஆகும் என்று அந்த கூட்டத்தில் பங்கேற்ற பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த தகவலின் அடிப்படையில் உலகில் ஒரேநாளில் ஒருநாட்டில் மட்டும் 3.70 கோடி பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னதாக கடந்த ஜனவரி மாதம் உலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 40 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்ததே அதிகபட்ச வைரஸ் பதிவாக இருந்தது.

ஆனால், சீனாவில் இம்மாதத்தில் 20-ம் தேதி வரை 24 கோடியே 80 லட்சம் பேருக்கு கொரோனா பரவி இருப்பதாக கிடத்துள்ள தகவல்கள் உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளன. இந்த தகவல் கொரோனா தடுப்பு உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பெயர் குறிப்பிடவிரும்பாத அதிகாரி மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. போராட்டங்கள் காரணமாக சீன அரசு கொரோனா தடுப்பு வழிகாட்டு நடைமுறைகள், ஊரடங்கை உடனடியாக நிறுத்திவிட்டன.

இது, வேகமாக பரவும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பை அதிகரித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனா வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்தாமல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சினோவேக்ஸ் போன்ற தடுப்பூசிகளை பயன்படுத்தி வருகிறது. சீன தடுப்பூசிகள் வைரசுக்கு எதிராக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மேலும், இந்த தடுப்பூசிகள் மக்களுக்கு குறைந்த அளவிலேயே நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதாலும் ஒமைக்ரான் வகை உருமாறிய வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது

சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 50 சதவிகிதத்திற்கு அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுவதாகவும், மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்க ரத்தம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகளும் பல மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க மக்கள் பெருநகரங்களில் இருந்து வெளியேறி கிராமங்களை நோக்கி செல்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, வயது முதிர்ந்தோர் அதிக அளவில் உயிரிழப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இடுகாடுகளில் உடல்களின் வருகை பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும், மருத்துவமனைக்கு வெளியே வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதற்கான வீடியோ ஆதாரங்களும் சமூகவலைதளத்தில் பரவி வருகிறது. வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிப்பாலும் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here