அமெரிக்காவில் விமான விபத்தில் இந்திய பெண் பலி

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்து வந்த இந்திய வம்சாவளி பெண் ரோமா குப்தா (வயது 63). இவரது மகள் ரீவா குப்தா (33). இவர்கள் இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை லாங் தீவில் உள்ள ஒரு விமான நிலையத்தில் இருந்து ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானத்தில் புறப்பட்டு சென்றனர்.

விமானத்தை 28 வயதான விமானி ஒருவர் இயக்கினார். இந்த விமானம் லாங் தீவில் உள்ள விமான நிலையத்துக்கு மீண்டும் திரும்பி கொண்டிருந்தபோது, நடுவானில் விமானத்தில் திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து விமானி விமானத்தை அவசரமாக தறையிறக்க முயன்றார். ஆனால் அவரது கட்டுப்பாட்டை இழந்த விமானம் தீப்பிடித்து எரிந்தவாறே அங்குள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் ரோமா குப்தா சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். அவரது மகள் ரீவா குப்தாவும், விமானியும் பலத்த தீக்காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் இருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில், அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியமும், மத்திய விமான போக்குவரத்து நிர்வாகமும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here