அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் தீபாவளி பண்டிகை பொது விடுமுறையாக அறிவிப்பு

இந்துகளின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. வாழ்வில் உள்ள தீமைகள் அகன்று, நன்மைகள் பெருகும் பெருநாளாக இந்து மக்களால் இந்த பண்டிகை மதிக்கப்படுகிறது. மக்கள் புத்தாடை உடுத்தி, இனிப்புகளை வழங்கி உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இந்த பண்டிகையை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.

இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் வசிக்கும் இந்து மக்களும், பிற மதத்தினரும் தீபாவளியை கொண்டாடுவது வழக்கம். அமெரிக்காவில் கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை வெள்ளை மாளிகையில் வைத்து அதிபர் ஜோ பைடன் கொண்டாடி இருந்தார். இந்நிலையில், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் ஆண்டுதோறும் தீபாவளிக்கு பொது விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பென்சில்வேனியாவில் தெற்காசியாவைச் சேர்ந்த 2 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வரும் நிலையில், இந்த பண்டிகையை முன்னிட்டு பொது விடுமுறை வழங்குவதற்கான சட்டத்தை அம்மாகாண மேலவையில் செனட்டர்கள் கிரெக் ரோத்மேன் மற்றும் நிகில் சவல் அறிமுகப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து இந்த சட்டம் பென்சில்வேனியா மாகாண மேலவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை செனட்டர் நிகில் சவல் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதன்மூலம் அங்கு தீபாவளிப் பண்டிகை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here