ராகுல் காந்தியின் சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி, ஆகஸ்ட்டு 5:

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான ஈராண்டு சிறைத் தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த ராகுல் காந்தி, 53, கர்நாடகாவின் கோலார் என்னும் இடத்தில் பேசினார். மோடி என்ற பெயர் வைத்த அனைவரும் ஒரேபோல இருப்பதாக அப்போது அவர் கூறினார். மேலும், ஒரு சர்ச்சை கருத்தையும் அவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தில், மோடி சமூகத்தை ராகுல் காந்தி இழிவுபடுத்திவிட்டதாகக் குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி என்பவர் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ராகுல் காந்தியைக் குற்றவாளியாக அறிவித்து, அவருக்கு ஈராண்டு சிறைத் தண்டனை விதித்தது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்கீழ், ஈராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கத் தகுதியற்றவர்.

அதன் அடிப்படையில் ராகுல் காந்தி தமது எம்.பி. பதவியை இழந்தார்.

அதனைத் தொடர்ந்து சூரத் நீதிமன்றம் அறிவித்த தீர்ப்பை எதிர்த்து, குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த நீதிமன்றம் சூரத் நீதிமன்றம் வழங்கிய சிறைத் தண்டனையை உறுதி செய்தது.

அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்ஹா மற்றும் சஞ்சய் குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணை நடத்திய அமர்வு, ராகுல் காந்திக்கு எதிரான ஈராண்டு சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து ராகுல் காந்தி எம்.பி.யாகத் தொடர்ந்து செயல்படுவார் என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here