ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவான ‘அவதார்: தி வே ஆப் வாட்டர்’ திரைப்படம் வரும் ஜூன் 7-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியாகி, உலகெங்கும் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த படம் ‘அவதார்’. இரண்டு மணிநேரம் 40 நிமிடங்கள் நம்மை வேறு உலகுக்கு அழைத்து சென்றிருந்தது இத்திரைப்படம்.
1,000 கோடி செலவில் உருவான இப்படம் உலகம் முழுவதும் 2800 கோடி அமெரிக்க டாலர்களை வசூலித்தது. அதுவரை வேறு எந்தத் திரைப்படமும் நிகழ்த்த முடியாத வசூல் சாதனையை இத்திரைப்படம் நிகழ்த்தியது. கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு டிசம்பர் 16-ல் வெளியானது. முதல் பாகத்தைப்போல மிகச் சிறப்பான காட்சி அனுபவத்துடன் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் 160 மொழிகளில் 52 ஆயிரம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
கிட்டத்தட்ட ரூ.3 ஆயிரம் கோடியில் உருவான இப்படம் உலகம் முழுவதும் ரூ.15 ஆயிரம் கோடிக்கும் அதிகமான வசூலை வாரிக் குவித்தது. இந்நிலையில், இப்படம் வரும் ஜூன் 7ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.