ஜெர்மனி தனது நாட்டில் உள்ள ஐந்து ரஷ்யத் தூதரகங்களில் நான்கினை மூடுவதற்கு ரஷ்யா உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சுக்குத் தெரிவிக்கப்பட்டதாக ஜெர்மானிய தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
உக்ரேனில் மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்குப் பதிலடி தரும் வகையில் ஜெர்மனி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்று கூறப்படுகிறது.
இருப்பினும், அண்மையில் ரஷ்யா, தனது நாட்டில் ஜூன் மாதத்தில் இருந்து 350 ஜெர்மானியர்களே வேலை செய்ய அனுமதிக்கப்படுவர் என்று அறிவித்திருந்தது. அதனால், அங்குள்ள ஜெர்மானியத் தூதரகங்களிலும் ஜெர்மானிய கல்விக்கழகங்களிலும் பணிபுரிந்துவரும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்படக்கூடும் என்று ஜெர்மானிய அமைச்சு தெரிவித்தது.
இந்நிலையில் ரஷ்யாவின் ஆள்குறைப்பு நடவடிக்கையை அடுத்து ஜெர்மனி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
ஜெர்மனியின் இந்த முடிவு தவறான போக்கு என்றும் சினமூட்டும் செயல் என்றும் ரஷ்யா கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இதற்குத் தக்க பதிலடி தரப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
உக்ரேன் மீதான படையெடுப்புக்கு முன் ரஷ்யாவும் ஜெர்மனியும் பொருளியலில் பங்காளிகளாகத் திகழ்ந்தன. உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து ஜெர்மனி படிப்படியாக ரஷ்யாவுடனான அதன் உறவைக் குறைத்துக்கொள்ளத் தொடங்கியது. நிதி மற்றும் இராணுவ ரீதியிலான ஆதரவுகளை ஜெர்மனி நிறுத்திக்கொண்டது என்றும் கூறப்படுகிறது.