சுமார் 4 இலட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் வைத்திருந்ததற்காக 21 வயது வாலிபர் கைது

சிபு: RM402,052 மதிப்புள்ள போதைப்பொருள் வைத்திருந்ததற்காக 21 வயது வாலிபர் ஒருவர் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

“குறித்த போதைப்பொருள்கள் பொழுதுபோக்கு மையங்களுக்கு விற்கப்பட்டவை என்று நாங்கள் நம்புகிறோம். இங்குள்ள அனைத்து பொழுதுபோக்கு மையங்களும் போதைப்பொருள் இல்லாதவையாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று, இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 13) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், சிபு மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் சுல்கிப்ளி சுஹைலி கூறினார்.

ஜாலான் வோங் கிங் ஹுவோவில் உள்ள ஒரு வாடகை குடியிருப்பில் இருந்து, நேற்று திங்கட்கிழமை (ஜூன் 12) அந்த வாலிபர் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

சந்தேக நபருக்கு போதைப்பொருள் தொடர்பான முந்தைய மூன்று குற்றங்கள் உள்ளதாகவும், அவர் கடந்த ஆறு மாதங்களாக போதைப்பொருள்களைச் சேமித்து வைக்க குறித்த குடியிருப்பைப் பயன்படுத்தினார் என்று சுல்கிப்லி கூறினார்.

அடுக்குமாடி குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனையின் போது, போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையினர் “ஜூஸ் மாஸ்டர்” என்று பெயரிடப்பட்ட 71 வண்ண பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் எக்ஸ்டஸி தூள்கள் (2.294 கிராம்), 1,511 எக்ஸ்டஸி மாத்திரைகள் (566.73 கிராம்), 43 வெளித்தெரியும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகள், கெட்டமைன் (273 கிராம்) என சந்தேகிக்கப்படும் கிரிஸ்டல் பவுடர் மற்றும் 26 வெள்ளை நிற பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் கொண்ட மஞ்சள் நிற கட்டிகள் மற்றும் வெள்ளை தூள் எக்ஸ்டசி (25,447 கிராம்) என சந்தேகிக்கப்படும் தூள்களைக் கண்டுபிடித்தனர்.

சந்தேக நபரிடம் இருந்து RM146,000 மதிப்புள்ள நான்கு சக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக சுல்கிப்லி கூறினார்.

சந்தேக நபருக்கு சிறுநீர் பரிசோதனை நடத்தப்பட்டது, அதில் அவர் மெத்தம்பேட்டமைன் இருப்பது உறுதியானது.

ஆபத்தான போதைப்பொருள் சட்டம் (ADB) 1952 இன் பிரிவு 39B மற்றும் ADB 1952 இன் பிரிவு 15(1) ஆகியவற்றின் கீழ், சந்தேக நபர் விசாரணைக்காக ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் மரண தண்டனை எதிர்நோக்குவார் என்றும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here