புத்ராஜெயா:
இந்திய சமூகத்தை மடானி அரசு ஒருபோதும் ஓரங்கட்டியதில்லை.
உண்மையில், நாங்கள் இந்திய சமூகத்தை மேம்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகின்றோம் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
“எந்தவொரு சமூகத்தையும் புறக்கணிக்காது அனைத்து சமூகத்திற்கும் உதவும் செயல்முறையை அரசு கொண்டுள்ளது என்றார் பிரதமர்.
அரசு பூமிபுத்ராவுக்கு உதவுவதை முன்னுரிமையாக கொண்டுள்ளது, இது மற்றய சமூகத்தினருக்கு உதவவில்லை என்று அர்த்தமல்ல.

அதுபோல மலாய்க்காரர்களுக்கு உதவுகிறோம் என்பதற்காக ஏனைய இனக் குழுக்களை நாம் ஒதுக்கி வைப்பதாக பொருள்படாது. அதனால்தான் பூமிபுத்ராவைப் பற்றி கோபப்படவோ பொறாமைப்படவோ வேண்டாம் என்று நான் இந்திய சமூகத்தை எப்போதும் வலியுறுத்துகிறேன் என்று அவர் சொன்னார்.
அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்று கேளுங்கள், உதாரணமாக 50, 60 ஆண்டுகளுக்கு முன்பு, மலேசியாவில் பிறந்தவர்களுக்கு குடியுரிமை கிடைக்கவில்லையா? அதையெல்லாம் அரசு தீர்த்து வைத்து வருகிறது. இதுபோன்று முதல் முறையாக உள்துறை அமைச்சில் பல பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளது என்று, நேற்றிரவு தொலைக்காட்சிகளுக்கு வழங்கிய நேர்காணலில் பிரதமர் கூறினார்.
இந்திய சமூகத்தின் சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்திற்காக மித்ராவில் 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

MITRA மூலம் ஒதுக்கீடு கல்வி திட்டங்களுக்கு; திறன் பயிற்சி; வறுமைக்கோட்டிற்குகீழுள்ள இந்தியக் குடும்பங்களைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை ஈடுகட்ட நிதி உதவி; விவசாயம், மைக்ரோ மற்றும் கிக் பொருளாதாரம் உள்ளிட்ட இந்திய தொழில்முனைவோருக்கான தொழில் மேம்பாட்டு திட்டங்கள் என பல உதவிகளை அரசு செய்கிறது.
மேலும் சமூக நலத்திட்டங்கள், அத்துடன் இந்திய சமூகத்திற்கான கலாச்சார, மொழி, ஆன்மீக வளர்ச்சி மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளையும் இது உள்ளடக்கியுள்ளது.

அதேநேரம் தெக்குனில் கூடுதலாக 30 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. அமானா இக்தியாரில் கூடுதலாக 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் நாட்டில் உள்ள தமிழ்ப்பள்ளிகளை பாதுகாக்கும் நோக்கிலும் அரசாங்கம் நிதி ஒதுக்கியுள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக அரசாங்கத்தின் பல திட்டங்களின் வாயிலாக இந்திய சமூகம் பயன் பெற்று தான் வருகிறது.

எனவே இந்திய மக்களுக்கு அரசு உதவவில்லை என்ற கூற்றை நான் முற்றாக நிராகரிக்கிறேன் என்று அன்வர் சொன்னார்.
மேலும் ஒரு சில தரப்பினர், குறிப்பாக செல்வந்தர்கள் இந்திய சமூகத்தில் செல்வாக்கு செலுத்த முயற்சிப்பதாகவும் பிரதமர் கூறினார்.




















