வெளியேறக் காத்திருக்கும் 100 மஇகா கிளைகள், கெடா மாநிலத்தில் பரபரப்பு 

கு. அன்பரசன் 

சுங்கைபட்டாணி, ஜூலை 7-

கெடா மாநில மஇகாவில் மொத்தம் 360 கிளைகள் உள்ளன. இவற்றுள் 100க்கும் அதிகமான கிளைகள் அக்கட்சியில் இருந்து  வெளியேறுவதற்குத் திட்டமிட்டுள்ளன என்ற தகவல்கள் மாநில அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மெர்போக், ஜெராய், குபாங் பாசு, அலோர்ஸ்டார், லங்காவி, பொக்கோ செனா, பாடாங் செராய் ஆகிய மஇகா தொகுதிகளில் உள்ள இந்தக் கிளைகள் வெளியேறக்கூடும் என்று தகவல்கள் கசிந்துள்ளன.

அண்மையில் கிளைகளின் ஆண்டுக் கூட்டம் முறையாக நடத்தப்பட்டது. ஆனால் ஒரு தரப்பு இந்தக் கூட்டத்திற்கு உறுப்பினர்கள் வந்து கலந்து கொள்வதற்குத் தடைக்கல்லாக இருந்திருக்கிறது என்று தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பாத மஇகா கிளைத் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

எல்லாவற்றுக்கும் மேலாக லங்காவி தொகுதியில் உள்ள 10 கிளைகளும் அலோர்ஸ்டார் தொகுதியைச் சேர்ந்த 10 கிளைகளும் மொத்தமாக முடக்கப்பட்டிருப்பது  பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என்று மாநிலத்தைச் சேர்ந்த மஇகா  முக்கியப் புள்ளி ஒருவர் தெரிவித்தார்.

அண்மையில் செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரன் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் மாநில மஇகாவின் பெரும்பாலான கிளைத் தலைவர்கள் பங்கேற்றனர். கலந்து கொண்டவர்கள் யார் யார் என்பதை சீனரின் பெயரோடு தொடர்பு கொண்ட  ஒருவர் படம்பிடித்து கெடா மாநில மஇகா தலைவருக்கு அனுப்பி இருக்கும் தகவலையும் தாங்கள் பெற்றிருப்பதாக அவர் மேலும் சொன்னார். 

வரும் மஇகா மத்திய செயலவைக் கூட்டத்தில் இந்தக் கிளைகள் பற்றி விவாதிக்கப்படுவதோடு அவற்றின் தலையெழுத்தும் நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  லங்காவி, அலோர்ஸ்டார் தொகுதிகளின் கூடாரமே காலியாகும் நிலை  இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதனிடையே கெடா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் களம் சுடுபிடித்திருக்கின்ற நிலையில் மஇகாவின் கிளைகள் வெளியேற்றம் என்பது மிகப்பெரிய தாக்கத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. மாநிலம் முழுவதும் இது குறித்துத்தான் ஒரே பேச்சாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here