இந்தியர்களுக்கான தேர்தல் வாக்குறுதிகள் என்ன?

பி.ஆர். ராஜன் 

கோலாலம்பூர், ஜூலை 11-

சமூகவியல், பொருளாதாரம், கல்வி

வரும் ஆகஸ்டு 12ஆம் தேதி 6 மாநிலங்களில் 15ஆவது சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இவற்றுள் கிளாந்தான், திரெங்கானு மாநிலங்களைத் தவிர்த்து கெடா, பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் ஆகிய 4  மாநிலங்களில் இந்திய வாக்காளர்கள் வெற்றியை நிர்ணயிக்கக்கூடிய பிரமாஸ்திரத்தைக்  கொண்டுள்ளனர்.

இதுவரை 14 பொதுத்தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளன. ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் இந்திய சமுதாயத்திற்கு பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன. ஆனால் நிறைவேற்றப்படுவது என்னவோ மிகக்குறைவுதான். இன்றைய சுழ்நிலையில் அரசியல் களம் மாறி இருக்கிறது. பரம வைரிகளாக இருந்தவர்கள் ஒன்று சேர்ந்து இந்தச் சட்டமன்றத் தேர்தல்களைச் சந்திக்கின்றனர்.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான், டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் ஸாஹிட் ஹமிடி தலைமையிலான பாரிசான் நேஷனல் ஆகிய இரண்டு கூட்டணிகளும் ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் இந்தத் தேர்தலைச் சந்திக்கின்றன.

அதே சமயத்தில் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி தேர்தல் களத்தில் புதிய அலையை ஏற்படுத்தி இருக்கிறது. தேர்தல் களமும் சுடுபிடித்திருக்கிறது. வாழ்வா? சாவா போராட்டத்தில் ஒவ்வோர் அரசியல் கட்சியும் களம் இறங்கி இருக்கின்றன.

இந்தக் கூட்டணிகளால் மலாய் வாக்காளர்களின் ஒட்டுமொத்த ஓட்டு வங்கி பிளவுபட்டிருக்கிறது. பக்காத்தான் ஹராப்பான், பாரிசான் நேஷனல், பெரிக்காத்தான் நேஷனல் என மூன்று தரப்புகளும் மலாய்க்காரர்களின் வாக்குகளை நம்பி களம் காண்கின்றன.

இந்நிலையில் மலேசிய இந்தியர்களின் குறிப்பாக வாக்காளர்களின் ஆதரவு பெறும் கூட்டணிகளே வெற்றியைக் குவிக்கக்கூடிய நிலையில் அரசியல் களம் நகர்கின்றது. ஒவ்வொரு தொகுதியிலும் இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை 10 முதல் 25 விழுக்காடு வரை உள்ளது.

தேர்தல் வாக்குறுதிகள் என்ன?

இவ்வாறான ஒரு சுழ்நிலையில் மலேசிய இந்தியர்களுக்கு இந்தத் தேர்தல் காலகட்டத்தில் என்ன வாக்குறுதிகள் தரப்படவுள்ளன என்பதில் இந்திய சமுதாயம் மிகுந்த கவனத்துடன் அரசியல் நகர்வுகளைக் கண்காணித்து வருகிறது.

14 பொதுத்தேர்தல்களில் ஏற்பட்டுள்ள ஏமாற்றங்கள் இனியும் நீடிக்கக்கூடாது என்பதில் அவர்கள் மிகுந்த கவனத்துடன் இருந்து வருகின்றனர். சமூகவியல், பொருளாதாரம், கல்வி ஆகியவற்றில் இந்திய சமுதாயத்தின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கிறது.  இவைதாம் தங்களுடைய வாழ்க்கைக்காக அஸ்திவாரம் என்பதையும் அவர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

இந்த சட்டமன்றத் தேர்தல்களில் இந்தியர்களின் வாக்குகளைக் கவரும் வகையில் ஒவ்வொரு கூட்டணியும் அறிவிக்கப்போகும் வாக்குறுதிகள் மிக  முக்கியப் பங்களிப்பை வழங்கும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. 

நடப்பு அரசியல் சுழ்நிலையில் பக்காத்தான் ஹராப்பான், பாரிசான் நேஷனல் கூட்டணிகள் மீதான இந்திய  வாக்காளர்களின் நம்பிக்கை சற்றே சரிவு கண்டுள்ளது. அதே சமயம் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிப் பக்கம் மீது அவர்களின் பார்வை திரும்பி இருப்பதையும் நிராகரிப்பதற்கில்லை.

சமூகவியல்

அடையாள ஆவணங்கள் இந்தியர்களுக்கு ஒரு தீராத பிரச்சினையாக இருக்கிறது. இந்த மண்ணில் பிறந்ததற்கான ஆதாரங்கள் இன்றி ஒரு குறிப்பிட்ட தரப்பினர் அல்லல்பட்டுக் கொண்டிருப்பதோடு ஒரு சாதாரண குடிமகனுக்குக் கிடைக்கக்கூடிய  சலுகைகளை இழந்து கொண்டிருக்கின்றனர்.

பிறப்புப் பத்திரம், அடையாள அட்டை, குடியுரிமை போன்றவற்றைப் பெறுவதில் ஒரு மூன்றாம்தர மக்களாகவே நடத்தப்படுகின்றனர். இந்தத் தோற்றத்தை மாற்றி அமைத்து ஒரு நீண்டகாலப் பிரச்சினைக்கு விரைவான தீர்வு தரக்கூடிய ஒரு வாக்குறுதியை இந்தக்  கூட்டணிகளால் வழங்க முடியுமா? என்ற கேள்வியும் உதயமாகி இருக்கிறது.

சொந்த நாட்டிலேயே அநாதைகளாக ஒரு கொடிய வாழ்க்கையை இவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதற்குச் சரியான தீர்வுகளை; முடிவுகளை யாரால் கொண்டு வர முடியும் என்பதைப் பொறுத்து இந்திய வாக்காளர்களின் ஆதரவு திரும்பும்.

பொருளாதாரம் 

நாட்டில் இந்தியர்களின் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை தனிமனிதர்களின் வளர்ச்சிதான் அதிகமாக இருக்கின்றது. ஒட்டுமொத்த சமுதாயத்தில் ஒரு மிகப்பெரிய பிரிவினர் அடிநிலை ஏழ்மையில்தான் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 

வாய்க்கும் வயிற்றுக்குமான இவர்களின் போராட்டத்திற்கு ஒரு நிரந்தரத் தீர்வு இதுவரை காணப்படவில்லை. இவர்களுக்கான வழிதான் என்ன? இவர்களைக் கைதூக்கி விடுவதற்கு வழங்கப்படவுள்ள வாக்குறுதிகள்தாம் என்ன?

சொந்த வீடுகள் இல்லாது புறம்போக்குப் பகுதிகளில் வாழ்பவர்களின் எண்ணிக்கையையும் கவனத்தில் கொள்ளப்போவது யார்? அரசாங்கம் கட்டித்தரக்கூடிய பிபிஆர் எனும் மக்கள் வீடமைப்புத் திட்டங்களிலும் இவர்களுக்கு  சரியான வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை.

மலிவு விலை வீடுகள் இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த பணக்காரர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சென்று சேர்கின்றன. ஏழைகள் வீடுகள் இன்றி இன்னமும் பரிதவித்துக்  கொண்டுதான் இருக்கின்றனர்.

மலேசியா அதன் 66ஆவது சுதந்திர தினத்தை வரும் ஆகஸ்டு 31ஆம் தேதி கொண்டாடவிருக்கிறது. ஆனால் ஏழை இந்தியர்கள் ஒரு செளகரியமான வீடுகள் இன்றி வாழ்ந்து கொண்டிருப்பது வேதனையின் உச்சம். 

நிலத்திட்டங்களில் இந்தியர்களுக்கான வாய்ப்புகள் என்ன?

அதேபோன்று தொழில்துறைகளில்  குறிப்பாக நிலத்திட்டம், விவசாயம் போன்ற துறைகளில் இந்தியர்களுக்கு இன்றளவும் ஒரு முறையான – நிறைவான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. பெல்டா, பெல்கிரா போன்ற நிலத்திட்டங்களில் இந்தியர்களுக்கு வாய்ப்புகள் என்பது குதிரைக்கொம்பாகத்தான் இருக்கிறது. 

பெல்டா நிலத்தில் மட்டும் ஒரு சிறு எண்ணிக்கையிலான இந்தியர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. ஏழைகளாக இருந்தவர்கள் இன்று செல்வச் செழிப்பில் இருக்கின்றனர். இத்திட்டத்தின் மூலம் ஓர் ஏழையும் பணக்காரர் ஆகலாம் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. 

ஏழை இந்திய சமுதாயத்தைக் கைதூக்கி விடுவதற்கு இது ஓர் அருமையான திட்டம் என்பதற்கு ஓர் அளவுகோலாக பெல்டா நிலத்திட்டம் நிரூபித்திருக்கிறது. அதேபோன்று பெல்கிரா நிலத் திட்டத்திலும் இந்தியர்களுக்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். தொடர்ந்து விவசாயம், மீன்வளர்ப்புத் திட்டங்களிலும் இந்தியர்களுக்கு நியாயமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். 

இந்த இரண்டு துறைகளிலும் இந்தியர்களால் சாதிக்க முடியும், வாழ்க்கையில் உயர முடியும் என்பது சுதந்திரகாலம் தொட்டே நிரூபிக்கப்பட்டு வருகிறது. வாய்ப்புகள் தரப்பட்டால் இவர்களாலும் சாதிக்க முடியும். 

பாரம்பரியத் தொழில்துறைகள்

இந்தியர்களின் பாரம்பரியத் தொழில்துறைகளான சிகை அலங்காரம், பொற்கொல்லர், உணவகங்கள் போன்ற  துறைகளில் ஏற்பட்டுள்ள ஆள் பற்றாக்குறையைச் சரிசெய்யக்கூடிய நடவடிக்கைகளை அரசாங்கம் விரைந்து எடுக்க வேண்டும்.  

இந்தத் துறைகளை நம்பி வாழ்பவர்கள் முதலாளிகளாகவும் அதன் பணியாளர்களாகவும் இருக்கின்றனர். வருமானம் தரக்கூடிய இத்தொழில்துறைகள் தற்போது ஆள் பற்றாக்குறையால் மிகப்பெரிய சவால்களையும் பாதிப்புகளையும் எதிர்நோக்கியுள்ளன.

இந்திய சமுதாயத்தைப் பொருளாதார ரீதியில் கைதூக்கி விடுவதற்கு இந்தத் துறைகளில் ஏற்பட்டுள்ள குறைகளையும் பற்றாக்குறைகளையும் நிவர்த்தி செய்வதற்கு என்ன செய்யப் போகிறார்கள்? இதற்கு யார் சரியான தீர்வை வழங்கப் போகிறார்கள்? இதற்கும் ஒரு வாக்குறுதி அவசியமாகிறது.

குறு, சிறு, நடுத்தர தொழில்துறைகளில் நிறைவான வாய்ப்புகள் வழங்கப்படுவதோடு அவற்றுக்குரிய லைசென்ஸ் மேலும் நிதி வழங்குவதிலும் பாரபட்சம் கூடாது. இதனைச் சரியாகச் செய்துதரும் பட்சத்தில் இந்திய சமுதாயத்தின் பொருளாதார அந்தஸ்து உயர்வதற்கு வாய்ப்பாக அமையும். 

கல்வியில் இந்தியர்களுக்கான வாய்ப்புகள் என்ன?

ஒரு சமுதாயம் தலைநிமிர்ந்து வாழ்வதற்கும் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை அடைவதற்கும் கல்வி ஓர் அடித்தளமாக விளங்குகிறது. ஆரம்ப – இடைநிலைக் கல்வியை ஆக்கப்பூர்வமாக முடிக்கும் இந்திய மாணவர்கள்  மெட்ரிகுலேஷன், அரசாங்கப் பல்கலைக்கழகங்கள்  போன்றவற்றில் வாய்ப்புகளைப் பெறுவதற்கு மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டி இருக்கிறது.

 மற்றவர்களின்  வாய்ப்புகளைப் பறித்து இந்திய மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று யாரும் குறிப்பாக இந்திய சமுதாயம் கேட்கவில்லை. தகுதியுள்ள தங்களது பிள்ளைகளுக்கு முறையான வாய்ப்புகளை வழங்குங்கள் என்றுதான் சமுதாயம் போராடிக் கொண்டிருக்கிறது.

பி40 பிரிவைச் சேர்ந்த  இந்திய மாணவர்களுக்கு உயர்கல்வி என்பது ஓர் எட்டாக்கனியாக இருந்து விடக்கூடாது.  மெரிட் அடிப்படையில் அவர்களுக்கு நியாயமான வாய்ப்புகள் தரப்பட வேண்டும். அதே போன்று இந்த உயர்கல்வியை முடிக்கும் வரையில் அவர்களுக்குப் பொருளாதார ரீதியில் உரிய பங்களிப்பையும் வழங்க வேண்டும். 

திவெட் தொழில்நுட்பக் கல்வி 

எஸ்பிஎம் தேர்வுகளில் சரியான தேர்ச்சியைப் பெற்றிராத இந்திய மாணவர்களுக்கும் படிப்பைப் பாதியில் கைவிட்டவர்களுக்கும் திவெட் எனப்படும் தொழில்நுட்ப, தொழிற்பயிற்சிக் கல்வியில் வாய்ப்புகள் மிக அதிகமாகத் திறந்து விடப்பட வேண்டும். 

இந்திய மாணவர்களைக் குறிப்பாக பி40 தரப்பு பிள்ளைகளை இத்துறைக்கு ஈர்க்கக்கூடிய விளம்பரங்களைச் செய்வதற்கும் வாக்குறுதிகள் வழங்கப்பட வேண்டும். இந்த திவெட் கல்வி வேலை உத்தரவாதத்துடன் கூடியது என்பதால் இதில் அதீத கவனம் செலுத்தப்படக்கூடிய வாக்குறுதிகள் மிக அவசியமாகும்.

வேலை வாய்ப்புகள் – பதவி உயர்வுகள் 

இந்திய சமுதாயத்தினருக்கு அரசாங்கத் துறையில் நியாயமான வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அதேபோன்று உயர்பதவி வாய்ப்புகளும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இடைநிலைப் பள்ளிகளில் முதல்வர் பதவிகளில் இந்தியர்களின் எண்ணிக்கை  விரல்விட்டு எண்ணக்கூடியதாகவே இருக்கின்றது. அதேபோன்று பல்கலைக்கழக இணைப் பேராசிரியர்கள் பதவிகளும் இன்னமும் எட்டாக்கனியாகத்தான் இருக்கிறது.

இதற்குச் சரியான தீர்வையும் வாய்ப்புகள் வழங்கப்படுவதையும் உறுதி செய்யும் வாக்குறுதிகள் அவசியம். இந்தியர்களின் ஆதரவைப் பெறுவதற்கு இந்த வாக்குறுதிகள் கண்டிப்பாக நிறைவேற்றப்பட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here