மெட்ரிகுலேஷன்: கல்லூரிகளில் இந்திய மாணவர்கள் எத்தனை பேருக்கு வாய்ப்பு?

பி.ஆர். ராஜன்

கோலாலம்பூர், ஜூலை 15-

உயர்கல்வி அமைச்சு புள்ளி விவரங்களை வெளியிடுமா?

2023ஆம் கல்வி ஆண்டுக்கான மெட்ரிகுலேஷன் வாய்ப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த எத்தனை மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது? என்ற தகவல் இதுவரையில்  வெளியிடப்படவில்லை. ஆனால் 206 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட தகவல் மட்டுமே வெளியாகி இருக்கிறது.

ஒவ்வோர் ஆண்டும் மெட்ரிகுலேஷன் கல்வி வாய்ப்பைப் பெற்ற இந்திய மாணவர்களின் எண்ணிக்கைகள் வெளியிடப்படும். இம்முறை  இதுவரை அதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. எண்ணிக்கை அதிகரித்திருக்கிறதா? அல்லது படுமோசமாகக் குறைந்திருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்வதற்கு இந்த விவரங்கள் தேவைப்படுகின்றன.

இது ஒரு பரம ரகசியம் அல்ல. விண்ணப்பம் செய்த மாணவர்கள், அவர்களின் பெற்றோர் மேலும் இந்திய சமுதாயத்தினர் இதனைத் தெரிந்து கொள்வதில் எந்தத் தவறும் இல்லை.  இது ரகசியக்காப்புச் சட்டத்தின் கீழும் வைக்கப்படவில்லை என்பதும் நிதர்சன உண்மை.

பி40 பிரிவைச் சேர்ந்த ஏழைகளின் பிள்ளைகள் தனியார் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க முடியாத நிலையை எதிர்கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு  கல்வி அமைச்சு ஏற்று நடத்தும் மெட்ரிகுலேஷன் கல்லூரிகள் இவர்களின்  கல்வித் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய நிலையில் இருக்கின்றன. இருப்பினும் ஒவ்வோர் ஆண்டும் இதற்கு மிகப்பெரிய ஒரு போராட்டத்தையே நடத்த  வேண்டி இருக்கிறது.

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட 206 மாணவர்களும் மிகச்சிறந்த மதிப்பெண்களைப் பெற்றவர்கள் என்று சொல்லப்படுகிறது. தகுதி   (மெரிட்) அடிப்படையில்கூட இந்த விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பது வேதனைக்குரியது.

இந்திய சமுதாயத்தைப் பொறுத்தவரை 206 இடங்கள் என்பது மிகப்பெரிய எண்ணிக்கையாகும். ஏன், எதற்காக நிராகரிக்கப்பட்டது என்பதற்கு ஒரு தெளிவை உயர்கல்வி அமைச்சு வழங்க வேண்டும்.

கல்வியில் இந்திய சமுதாயப் பிள்ளைகள் பின்தள்ளப்படமாட்டார்கள் என்று மேடையில் முழங்கினால் மட்டும் போதாது. அதனை நடைமுறையில் செய்து காட்ட வேண்டும். இதைத்தான் இந்நாட்டு இந்திய சமுதாயம் எதிர்பார்க்கிறது.

மிகுந்த எதிர்பார்ப்புடன் எஸ்பிஎம் கல்வியை முடித்து மேல்நிலைக் கல்வியைத் தொடர்வதற்குக் காத்திருந்த மாணவர்களின் கனவில் மண் விழுந்திருக்கிறது. இது அவர்களைப் பொறுத்தவரை மிகப்பெரிய ஏமாற்றம். 

இந்த நிலைக்கு என்ன காரணம் என்பதைக் கேட்டறிவதற்கு  சமுதாயத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும் இதுவரை குரல் கொடுக்காமல் இருப்பதும் மிகப்பெரிய வேதனையாக இருக்கிறது. நாங்கள் ரகசியமாகப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று சொல்வதெல்லாம் இனி எடுபடாது.

காலம் முழுவதும் பேசியது போதும். நம்  பிள்ளைகளின் எதிர்காலத்தில் ஒளியேற்றுவதற்கு சமுதாயத்தைச் சேர்ந்த அனைத்துத் தரப்பினரும் ஒரே குரலாக ஒலித்தால் இந்தப் பிரச்சினைக்கு ஓர் ஆக்கப்பூர்வமான தீர்வு பிறக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. 

நெஞ்சம் நிறைய துக்கங்களைச் சுமந்து கொண்டிருக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கு ஒரு நிம்மதியான; மகிழ்ச்சியான பதிலைப் பெற்றுத் தருவதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here