சிகிச்சைக்கு பிரபல நடிகரிடம் கடன் வாங்கினாரா? ; நடிகை சமந்தா விளக்கம்

ஐதராபாத், ஆகஸ்ட்டு 6:

சமந்தா நடிப்பில் சமீபத்தில் வந்த படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. சாகுந்தலம் படம் படுதோல்வி அடைந்தது. தற்போது விஜய்தேவரகொண்டா ஜோடியாக ‘குஷி’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தமிழிலும் வெளியாக இருக்கிறது. குஷி வரும் செப்டம்பர் 1 ம் தேதி வெளியாகவுள்ளது. சமந்தா இந்தி வெப் தொடரான சிட்டாடலிலும் நடித்து முடித்து உள்ளார்.

ஏற்கனவே சமந்தாவுக்கு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை எடுத்தும் குணமாகவில்லை. சமந்தா நடிப்பில் வருடத்திற்கு மூன்று படங்கள் வெளியாகி கொண்டு இருந்தன. கொரோனா தொற்று கால பாதிப்புக்கு பிறகு சமந்தாவின் சினிமா வாழ்க்கையின் வேகம் குறைந்துவிட்டது. எல்லாம் சரியாகிவிட்டது என்று நினைக்கும் போது அவருக்கு மயோசிடிஸ் பாதிப்பு ஏற்பட்டது. இப்போது சமந்தா ஒரு வருடம் ஓய்வு எடுக்க வேண்டும்.

ஒரு வருடம் படங்களில் இருந்து ஒதுங்கி இருப்பதன் மூலம் ஓய்வு எடுக்கலாம் என நம்புகிறார் சமந்தா. சமூக வலைதளங்களில் மட்டுமே ஆக்டிவாக இருப்பார். இந்த நிலையில் சிகிச்சைக்காக ஒரு நடிகரிடம் ரூ.25 கோடி வரை கடன் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த ஹீரோ யார் என்று தெரியவில்லை.

தற்போது பாலியில் விடுமுறையை அனுபவித்து வரும் சமந்தா, விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளார். அங்கே ஒரு வருடம் தங்கி பூரண குணமடைந்த பிறகு இந்தியா திரும்புவார். இதற்காக, அந்த நடிகரிடம் கடன் வாங்கி உள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாகியது. இது குறித்து சமந்தா தரப்பிலிருந்தோ அல்லது அவரது குழுவினரிடமிருந்தோ எந்த தகவலும் இல்லை.

தற்போது இதுகுறித்தும் தான் சிகிச்சை பெற்று வருவது குறித்தும் நடிகை சமந்தா விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவர் பதிவிட்டுள்ளதாவது, மயோசிடிஸ் சிகிச்சைக்கு ரூ.25 கோடியா? தவறான தகவலை உங்களுக்கு கொடுத்துள்ளனர். அதில் ஒரு சிறிய தொகையை நான் எனக்காக செலவு செய்ததில் மகிழ்ச்சியே. என் சிகிச்சைக்காக நான் மற்றவர்களிடம் பணம் பெறவில்லை. என்னுடைய துறையில் நான் என் வேலைகள் மூலம் அதிக அளவில் சம்பாதித்துள்ளேன். அதனால், என்னால் என்னை பார்த்துக்கொள்ள முடியும். நன்றி. மயோசிடிஸ் என்பது ஒரு நிலை. அதில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர். அதனால் சிகிச்சை தொடர்பாக செய்திகள் வெளியிடும்போது சற்று பொறுப்புடன் இருங்கள் எனப் பதிவிட்டுள்ளார். சமந்தா தனது சிகிச்சைக்காக பிரபல நடிகரிடம் பணம் பெற்றதாக வெளியான தகவலை பொய் என உரைக்கும் வகையில் சமந்தா இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here