தீபன் போன்ற இளைஞர்களின் குரல் சிலாங்கூர் சட்டமன்றத்தில் எதிரொலிக்க வேண்டும் – அமைச்சர் சிவகுமார் அறைகூவல்

பி.ஆர்.ஜெயசீலன் / தி.மோகன்

கோலசிலாங்கூர், ஆக. 8-

கோலசிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட புக்கிட் மெலாவத்தி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் தீபன் சுப்பிரமணியம் போன்ற இளைஞர்கள் வெற்றிபெற்று சட்டமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் அறைகூவல் விடுத்தார்.

புக்கிட் ரோத்தான் தோட்ட மக்களுடனான சந்திப்பு  நேற்று மாலை சுங்கை பூலோ ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்றது. நூற்றுக்கும்  மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் கலந்துகொண்ட இச்சந்திப்பில்,  சிலாங்கூர் சட்டமன்றத்தில் இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எழுப்புவதற்கு தீபன் போன்ற வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வது புக்கிட் மெலாவத்தி வாக்காளர்களின் கடமை என கருத்துரைத்த அமைச்சர், நாட்டில் உள்ள மாநிலங்களில் சிறந்த அடைவு நிலையையும் பங்களிப்பையும் வழங்கிய மாநிலமாக சிலாங்கூர் விளங்குகிறது. 2008 ஆம் ஆண்டு முதல் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சிக் காலங்களில் அதன் தொடர் வளர்ச்சியை நாம் பார்த்து வருகிறோம்.

ஆலயங்கள், தமிழ்ப்பள்ளிகள, வறுமை ஒழிப்பு, கலை கலாச்சார நிகழ்ச்சிகள் போன்றவற்றை நமது சட்டமன்ற உறுப்பினர்கள் சிறப்பாக முன்னெடுத்து வந்துள்ளனர். சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களின் பணிகளைச் சிறப்பாக செய்து வந்துள்ளது பாராட்டுக்குரியது.

புக்கிட் மெலாவத்தி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தீபன் சுப்பிரமணியம்,  சட்டத்துறையில் கல்வி பயின்றவர். சிலாங்கூர் அரசாங்கத்தில் பல ஆண்டுகளாக உயர் பொறுப்புகளை வகித்து அனுபவம் பெற்றவராக இருக்கிறார். மக்கள் சொல்லும் பிரச்சினைகளைக் காது கொடுத்து கேட்கும் வேட்பாளராக இருப்பதால் இவர் போன்ற திறமைசாலிகள் சட்டமன்றத்திற்குச் செல்ல வேண்டும் என சிவகுமார் கேட்டுக் கொண்டார்.

சிலாங்கூர் மாநில இந்தியர் தொழில்முனைவோர் திட்டத்தை அறிமுகப்படுத்தி அதன் வழி பல இந்திய சிறுதொழில் வியாபாரிகளுக்குக் கைகொடுத்து தூக்கி விட்டுள்ளதை இங்கு வருகை புரிந்த மாநில பராமரிப்பு அரசாங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினரான ரோட்சியா இஸ்மாயில் நேரடியாகவே அவரைப் பாராட்டிச் சென்றதை சுட்டிக்காட்டிய சிவகுமார், மத்திய அரசாங்கமாக செயல்படும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்துடன் சேர்ந்து பணியாற்றவும் அரசாங்கம்  முன்னெடுக்கும் திட்டங்கள் யாவும் செயல்படுத்த மாநில அரசாங்கமும் ஒற்றுமை அரசாங்கமாக இருப்பது மிக அவசியமான ஒன்று. எனவே, இந்த புக்கிட் ரோத்தான் வட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் திறமையான வேட்பாளரான தீபனை தேர்வு செய்து வெற்றிபெறச் செய்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இதனிடையே, தோட்ட மக்கள் தொழிலாளர்கள் சார்பில் கொடுத்த மாதச் சம்பளப் பிரச்சினை, தோட்டத் தொழிலாளர்கள் வீடமைப்புப் பிரச்சினை, தார்ச்சாலை பிரச்சினைகள் குறித்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட அமைச்சர்,  புதிய ஆட்சிக்குழு உறுப்பினர் நியமனத்திற்குப் பின்னர் கலந்தாலோசிக்கப்படும் என்றும் வீடமைப்பு குறித்த நடவடிக்கைகள்  வீடமைப்புத் ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங், அதிகாரிகளை அழைத்து வந்து நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்துவோம் என அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here