பெங்களூருவில் ‘கேஜிஎப் 2’ சாதனையை முறியடித்த ‘ஜெயிலர்’

தமிழ்த் திரைப்படங்கள் தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் கர்நாடகாவிலும் அதிக அளவிலான தியேட்டர்களில் வெளியாகும். குறிப்பாக பெங்களூருவில் அந்தக் காலத்திலிருந்தே சென்னையை விடவும் அதிக தியேட்டர்களில் தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்படும். அங்கு தமிழர்கள் அதிகம் வாழ்வதும், கன்னட ரசிகர்களும் தமிழ்ப் படங்களை விரும்பிப் பார்ப்பதும் அதற்குக் காரணம்.

பொதுவாக ரஜினிகாந்த் படங்களுக்கு அங்கு எப்போதுமே தனி வரவேற்பு உண்டு. ரஜினிகாந்த் கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்பதாலும் இந்த வரவேற்பு என்று சொல்வார்கள். ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படம் நாளை மறுதினம் ஆகஸ்ட் 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. பெங்களூரு பகுதியில் மட்டும் இப்படம் 1090 காட்சிகள் அன்றைய தினம் திரையிடப்பட உள்ளதாம்.

இதற்கு முன்பு ‘கேஜிஎப் 2’ படம் 1037 காட்சிகள் திரையிட்டதே முந்தைய சாதனையாக இருந்தது. அதைத் தற்போது ‘ஜெயிலர்’ படம் முறியடித்துள்ளது. ‘அவதார் 2’ படம் 1014 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது. பெங்களூருவில் காலை 6 மணிக்கே ‘ஜெயிலர்’ படத்தின் சிறப்புக் காட்சி நடைபெற உள்ளது. படத்தில் கன்னட சினிமா ரசிகர்கள் கொண்டாடும் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here