பத்தாங் பாடாங் மாவட்ட சீன, தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான தேசியமொழி போட்டிகள் ; அதிக புள்ளிகளைப் பெற்று கிண்ணத்தை வென்றது பீக்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி

 

பத்தாங் பாடாங் மாவட்ட சீனப்பள்ளிகள் மற்றும் தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான பேரா மாநில கல்வி இயக்குனர் கிண்ண தேசியமொழி பேச்சுப்போட்டி மற்றும் தேசியமொழி கதைசொல்லும்  போட்டி இன்று நடைபெற்றது. அப்போட்டியில் அதிக புள்ளிகளைப் பெற்று கிண்ணத்தை வென்று சாதனைப் படைத்தது பீக்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி.

மேலும், கதைச் சொல்லும் போட்டியில் முதல் நிலையில் பனோப்டேன் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவி தாஷா மூர்த்தியும், பேச்சுப்போட்டியில் தாப்பா ரோடு கீர் ஜொஹாரி தமிழ்ப்பள்ளி மாணவி கீர்த்திகா சரவணனும் முதல் நிலையை வாகை சூடி மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.

 

பத்தாங் பாடாங் மாவட்டத்தில் மொத்தம் 12 தமிழ்ப்பள்ளிகளும் 18 சீனப்பள்ளிகளும் உள்ளன. பேராக் மாநில அளவிலான போட்டிக்கு மாணவர்களை தேர்வு செய்யும் வகையில் மாவட்ட நிலைகளில் போட்டி சுங்காய் தை மிங் சீனப்பல்லியில் நடத்தப்பட்டது. பள்ளிகளைப் பிரதிநிதித்து  மொத்தம் 60 மாணவர்கள் பங்குபெற்றிருந்த நிலையில், போட்டிகளில் வெற்றிகளைக் குவித்து தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனைப் படைத்தது பெருமையை சேர்த்துள்ளது என மாவட்டத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கழகத் தலைவரும், சுங்காய் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியருமான கா. தியாரன் தெரிவித்தார்.

பீக்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவி பிரியநிலா சசிகுமார் பேச்சுப்போட்டியில் இரண்டாம் நிலையையும், கதைக் கூறும் போட்டியில் மாணவி வாணிஸ்வரி ராஜேந்திரன் ஐந்தாம் நிலையிலும் வெற்றிபெற்று ஒட்டுமொத்த புள்ளியில் பள்ளியை முன்னிலைப் படுத்தி கிண்ணத்தை வாகை சூடச்செய்தனர்.

 

மலாய் மொழி கதைக் கூறும் போட்டியில் பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி மாணவி ஹஷ்விந்தரா திருவரசு இரண்டாம் நிலையிலும், பீடோர் தகான் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவி சுதர்ஷனா சுப்பிரமணியம் மூன்றாம் நிலையில், சுங்காய் தமிழ்ப்பள்ளி மாணவி ரிஷாந்தினி இராஜேந்திர ராவ் ஏழாம் நிலையில், தாப்பா தமிழ்ப்பள்ளி மாணவி சாந்தணி ஜெகநாதன் பத்தாம் நிலையில் வெற்றிபெற்றதுடன், தாப்பா ரோடு கீர் ஜொஹாரி தமிழ்ப்பள்ளியின் மாணவர் மாதேஷ் த/பெ பரிமனன் ஆறுதல் பரிசை பெற்றார் என அவர் தெரிவித்தார்.

மலாய் பேச்சுப் போட்டியில் சுங்காய் தமிழ்ப்பள்ளி மாணவி பிருந்தா குமரன் மூன்றாம் நிலையிலும், பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி மாணவன்  கார்த்திகை செல்வன் சுகுமாரன் ஐந்தாம் நிலையிலும், செண்டரியாங் பாரதி தமிழ்ப்பள்ளி மாணவி திவ்யா ஶ்ரீ சதா சிவம் ஏழாம் நிலையிலும் வெற்றிபெற்ற நிலையில், பீடோர் தகான் தமிழ்ப்பள்ளி மாணவன் ஜீவவிக்னேஷ் தியாரன் ஆறுதல் பரிசை பெற்றார்.

இது போன்று மாணவர்கள் மலாய் மொழி தொடர்பான போட்டிகளிலும் நடவடிக்கைகளிலும் தொடர்ந்து வளர்ச்சிப் பெற பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் பெரும் பங்காற்றினார். வெற்றிபெற்ற மாணவர்களுக்கும், பங்குபெற்ற இதர மாணவர்களுக்கும், சிரத்தையுடன் பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கும் அதே வேளையில், நன்றி கூறவும் கடமைப்பட்டுள்ளேன் எனவும் தியாரன் தெரிவித்தார்.

இவ்விழாவில் பத்தாங் பாடாங் மாவட்டத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள், மாணவர்களுக்கு பயிற்சி வழங்கிய ஆசிரியர்களும்  கலந்து கொண்டு சிறப்பித்தனர். சுங்காய் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்  குழு நடனம் படைத்து பாராட்டினைப் பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here