இந்தியர்களுக்கு உதவி செய்யுங்கள், எல்லா தேர்தல்களிலும் வெற்றி பெறுவீர்கள்

பி.ஆர். ராஜன்

கோலாலம்பூர், ஆக. 14-

மலேசிய இந்தியர்களை தேசியப் பொருளாதார நீரோட்டத்தில் ஓர் உயர்ந்த நிலையில் வைப்பதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் தேவையான அனைத்து அத்தியாவசிய உதவிகளையும் வழங்க வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் இனி வருங்காலத்தில் நடைபெறக்கூடிய அனைத்துப் பொதுத்தேர்தல்களிலும் மாநிலத் தேர்தல்களிலும் பக்காத்தான் ஹராப்பான் – பாரிசான் நேஷனல் ஒற்றுமைக் கூட்டணியை இந்தியர்கள் வெற்றிபெறச் செய்வார்கள் என்பது நிதர்சனம்.

அரசீப் பல்கலைக்கழகங்களில் பூமிபுத்ரா கோட்டா முறையை வாபஸ் பெற்றால் இனி வரக்கூடிய எல்லாத் தேர்தல்களிலும் பக்காத்தான் ஹராப்பான் தோற்றுவிடும் என்று அண்மையில் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பேசிய அன்வார் கூறியிருந்தார்.

இருப்பினும் நடந்து முடிந்த ஆறு மாநிலங்களின் 15ஆவது சட்டமன்றத் தேர்தலில் கோட்டா முறையை நீக்காமலேயே படுதோல்வியைச் சந்தித்திருக்கிறீர்கள். அதுபோல் ஏழ்மையில் சிக்கித் தவிக்கும் கிளாந்தான் மாநில மக்களுக்கு பிரகாசமான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு கோடிக்கணக்கான ரிங்கிட்டை அங்கு கொண்டுபோய் பிரதமர் குவித்தார்.

ஆனால் அந்த மாநில மக்களோ நாங்கள் மாறவே மாட்டோம் என்பதை நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மிகத் தெளிவாகச் சொல்லி இருக்கின்றனர். இதே அளவிலான உதவிகளை இந்திய சமுதாயத்திற்குப் பிரதமர் வழங்கினால் இனி வரும் எல்லாத் தேர்தல்களிலும் அவரின் ஒற்றுமை அரசாங்கம் வெற்றி பெறும் என்பதை மறுப்பதற்கில்லை.

கிளாந்தான் மாநிலத்திற்கு அதன் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கோடி கோடியாக நிதியைக் கொடுத்திருக்கிறீர்கள். இதற்கு கைமாறாக நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும் தலைக்குனிவைத் தரக்கூடிய தோல்வியை அம்மாநில மக்கள் குறிப்பாக வாக்காளர்கள் தந்திருக்கின்றனர்.

சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு, கெடா, மலாக்கா, ஜோகூர், பேராக், பகாங் ஆகிய மாநிலங்களில் வாழும் மக்களுக்கு குறிப்பாக இந்தியர்களுக்கு இனி பிரதமர் வழங்கப்போகும் உதவிகள், நலத்திட்டங்கள் நிரந்தர வாக்கு வங்கியாக மாறுவதற்குரிய வைப்புத் தொகையாக இருக்கும். தொடர் வெற்றியை அவர்கள் தேடித் தருவர்.

கிளாந்தான் மாநில மக்கள் மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கின்றனர். குடிப்பதற்கு நல்ல தண்ணீர் இல்லை. அதனால் அந்த மாநிலத்திற்கு ஒரு புது விடிவெள்ளியை ஏற்படுத்த வேண்டும் என்பது ஒற்றுமை அரசாங்கத்தின் முயற்சிகளுள் ஒன்றாக இருந்தது. ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் 45 தொகுதிகளில் பக்காத்தான் ஹராப்பான், பாரிசான் நேஷனல் தலா ஓரிடத்தில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் பெரிக்காத்தான் நேஷனல் 43 இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது.

இதன் மூலம் அந்த மாநில மக்கள் எங்களுக்கு இந்த வாழ்க்கைதான் பிடித்திருக்கிறது. எந்த உதவியும் தேவையில்லை. நாங்கள் மாறவே மாட்டோம் என்று மிகத்தெளிவான ஒரு செய்தியை அவர்கள் சொல்லி இருக்கின்றனர்.

மாறவே மாட்டோம் என்று கூறுபவர்களைக் கட்டி இழுப்பது  தேவையில்லாத சுமைதான். அதற்குப் பதிலாக 2008 முதல் மிகவும் விசுவாசமாக இருந்து வரும் இந்தியர்களைக் கைதூக்கி விடுங்கள். இந்த விசுவாசம் இன்னும் வலிமைபெற்று இனி வரக்கூடிய காலத்தைப் பொற்காலமாக  மாற்றுவர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here