அடாத மழை விடாது பெய்வது போல, ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் தொடங்கிய தியேட்டர் வசூல், இன்னும் விடாமல் போகிறது. ஆகஸ்ட் 10 ம் தேதியான வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படமும், ஆகஸ்ட் 11 ம் தேதி வெளியான காதர் 2 இந்தி திரைப்படமும், தியேட்டர்களுக்கு வரமாக வந்து, அதே நாளில் ரிலீஸான படங்களுக்கு சாபமாகவும் மாறியது அனைவரும் அறிந்ததே.
வெளியாகி முதல் சனி, ஞாயிறை தாண்டுவதே இன்றைய திரைப்படங்களில் பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. அந்த முதல் 7 நாட்களில் எடுக்கும் வசூல் தான், படத்தின் ஒட்டுமொத்த வெற்றியையும் தீர்மானிக்கிறது. அந்த வகையில், இரு சனி,ஞாயிறுகளை கடந்தும் குறையாத கூட்டமும், நிறைவான பாக்ஸ் ஆபிஸூமாய் களைகட்டுகிறது, ஜெயிலர் மற்றும் காதர் 2 படங்களின் ஷோக்கள்.
உலகளாவிய அளவில் 500 கோடியை தொட்டதாக கூறப்படும் ஜெயிலர், இந்திய அளவிலும் வசூலில் 300 கோடியை கடந்துள்ளது. அதே நேரத்தில் காதர் 2 திரைப்படம், 400 கோடியை கடந்துள்ளது. இந்த படங்களோடு வெளியான தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் போலா சங்கர் திரைப்படம், 50 கோடி ரூபாய் கூட வசூலாகாமல், படுதோல்வி அடைந்து, ரேஸில் பாதியில் விலகியது.
இப்போது வரை, காதர் 2 மற்றும் ஜெயிலருக்கு தான் கடுமையான போட்டி போகிறது. பிராந்திய மொழி திரைப்படமான ஜெயிலர், அதிகம் பேர் பேசும் இந்து மொழி திரைப்படமான காதர் 2க்கு, இந்தியாவில் சவால் விடுவது தான் இதில் சிறப்பான, தரமான சம்பவம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மந்திரம், நீண்ட நாட்களுக்குப் பின் வேலை செய்திருப்பதால், இந்த முறை ஜெயிலர் ஜொலிக்கிறார். இதோ ஆகஸ்ட் 21 ம் தேதி வரயைிலான இந்திய அளவிலான பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ:
காதர் 2:
மொத்த பட்ஜெட்: ரூ.100 கோடி
வசூல்: ரூ.400 கோடி
ஜெயிலர்:
மொத்த பட்ஜெட்: ரூ.200 கோடி
வசூல்: ரூ.300 கோடி
ஓ.எம்.ஜி.2:
மொத்த பட்ஜெட்: ரூ.150 கோடி
வசூல்: ரூ.120 கோடி
கூமர்:
மொத்த பட்ஜெட்: ரூ.28 கோடி
வசூல்: ரூ.2.2 கோடி
இந்த வாரத்தின் இறுதி வரை இதே நிலை தொடர்ந்தால், காதர் 2 மற்றும் ஜெயிலர், பெரிய வசூல்சாதனையை படைக்கும்.




















