3 விஷயம் முக்கியம்! இந்தியா என்பது ‛பாரத்’ என மாறுமா? ஐநாவில் பெயர் மாற்ற ஒப்புதல் வழங்குவது எப்படி?

ஜெனீவா: இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கு ஐநா சபையின் ஒப்புதல் அவசியம் என்ற நிலையில் 3 முக்கிய விஷயங்களை இந்தியா செய்ய வேண்டும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் பெயரை ‛பாரத்’ என மாற்றம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. வரும் 18 ம் தேதி நாடாளுமன்ற சிறப்பு சட்டசபை கூட்டம் தொடங்கி 5 நாட்கள் நடைபெற இருக்கிறது.

இந்த கூட்டத்தொடரில் இந்தியாவின் பெயரை ‛பாரத்’ என மாற்றம் செய்ய மத்திய அரசு மசோதா கொண்டு வருவதாக கூறப்படுகிறது.இதற்கு முன்னோட்டம் பார்க்கும் வகையில் தான் ஜி20 மாநாட்டையொட்டி ஜனாதிபதி திரெளபதி முர்மு அளிக்கும் டின்னர் விருந்துக்கான அழைப்பிதழில் ‛President of Bharat’ எனவும், பிரதமர் மோடியின் இந்தோனேசியாவின் சுற்றுப்பயணத்துக்கான அட்டவணையிலும் Prime Minister of Bharat எனவும் அச்சிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் பெயர் மாற்றத்துக்கு ஆதரவு, எதிர்ப்பு என கலவையான கருத்துகளை ஒவ்வொருவரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் தான் இந்தியாவின் பெயர் மாற்றத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்புதல் என்பது கிடைக்க வேண்டும். இந்தியாவின் பெயரை பாரத் என பெயர் மாற்றுவதற்கான பரிந்துரை வந்தால் பரிசீலனை செய்வோம் என்பது பற்றி ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளரான அன்டோனியா குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே தான் ஒருநாட்டின் பெயரை மாற்றம் செய்வதற்கு ஐநா சபையில் பின்பற்றப்படும் வழிமுறைகள் குறித்த முக்கிய விஷயம் வெளியாகி உள்ளது. பொதுவாக ஒரு நாட்டின் பெயரை மாற்றம் செய்ய வேண்டும் என்றால் அதற்கான அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் செய்ய வேண்டும். அந்த வகையில் இந்தியாவிலும் வரும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் இதற்கான மசோதா நிறைவேற்றப்படலாம்.

அதன்பிறகு இந்தியா வெறுமனே தனது பெயரை மாற்றம் செய்துவிட்டதாக கூறிவிட முடியாது. ஏனென்றால் இந்த விஷயத்தில் ஐநா சபையின் ஒப்புதல் அவசியம். ஐநா சபை என்பது ஒவ்வொரு நாடுகளின் சர்வதேச உறவுகளை பேணிப்பாதுகாப்பதற்கும், நாட்டின் இறையாண்மையை அங்கீகரிக்கும் உலகளாவிய மன்றமாக இருக்கிறது. இதனால் ஒரு நாட்டின் பெயர் மாற்றத்துக்கு ஐநா சபையின் ஒப்புதல் மிகவும் அவசியம். அதோடு ஐநா சபை ஒப்புதல் அளித்தால் மட்டுமே நாட்டின் பெயரை மாற்றம் செய்ய முடியும். அந்த வகையில் ஒரு நாட்டின் பெயரை மாற்றம் செய்ய ஐநா சபையில் சில முக்கிய வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த வழிமுறையின் அடிப்படையில் தான் சமீபத்தில் துருக்கி நாட்டின் பெயர் என்பது துருக்கியே என மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றம் செய்ய வேண்டும் என்றால் 3 முக்கிய விஷயங்களை ஐநா சபை பின்பற்றும்.

அதில் முதல் விஷயம் என்னவென்றால், முதலில் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றம் செய்வது தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து ஐநா சபைக்கு விண்ணப்பம் அளிக்க வேண்டும். அதன்பிறகு 2 விஷயம் என்பது விண்ணப்பத்தில் நாட்டின் பெயரை மாற்றுவதற்கான சரியாக காரணத்தை தெளிவாக குறிப்பிட வேண்டும். 3வது விஷயம் என்னவென்றால் இந்த விண்ணப்பத்தை ஐநா பரிசீலனை செய்யும். இந்தியாவின் பெயர் மாற்றம் செய்ய சரியாக காரணம் இருக்கும்பட்சத்தில் ஐநா அதற்கு ஒப்புதல் அளித்து பெயர் மாற்றத்தை அங்கீகரிக்கம். அதன்பிறகே முறைப்படி இந்தியாவின் பெயர் ‛பாரத்’ என முறைப்படி மாறும் என்து குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here