‘ஜேபிஜேண்டோரா’ ஆவணங்கள் சிறப்புப் பணிக் குழு விசாரிக்கும்.

கோலாலம்பூர், செப். 11-

      ஜேபிஜே எனப்படும்  சாலைப் போக்குவரத்து இலாகா கிளாசிக் வாகன எண் பிளேட் விற்பனைத் தொடர்பில் ஏற்பட்டிருக்கும்  சர்ச்சையைத் தொடர்ந்து அதனை அரசாங்கத்தின் சிறப்புப் பணிக் குழு விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

      ஜேபிஜேண்டோரா ஆவணங்கள் என்று அடையாளப் படுத்தப்பட்டுள்ள இந்த மோசடியில் பல்லாயிரக்கணக்கான ரிங்கிட்டிற்கு கிளாசிக் வாகனப் பதிவு எண் பிளேட்டுகள் விற்கப்பட்டன என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

      உத்துசான் மலேசியா மலாய் நாளிதழ் வெளியிட்டிருக்கும்  இச்செய்தியை ஜேபிஜே தலைமை இயக்குநர் டத்தோ ரோஸ்பியாகோஸ் தாஹா உறுதிப்படுத்தியிருக்கிறார்.

      பதிவு,  கிளாசிக் வாகனப் பதிவு எண் பிளேட்டுகளைக் கொண்டிருப்பது, கொடுப்பது போன்ற நடைமுறைகளில்  துல்லியமான வெளிப்படைத் தன்மை இருப்பதை உறுதி செய்வதற்கு இந்த சிறப்புப் பணிக் குழு சமர்ப்பிக்கும்  பல்வேறு பரிந்துரைகள் அமல்படுத்தப்படும் என்று அவரை மேற்கோள்காட்டி உத்துசான் மலேசியாவின் ஞாயிறு பதிப்பான மிங்குவான் மலேசியா கூறியிருக்கிறது.

      இந்தப் பணிக் குழுவுக்கு டத்தோ ரோஸ்பியாகோஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.  ஜேபிஜே-வின் உயர்நெறிப் பிரிவு இந்த விவகாரத்தின் மீதான புலன்விசாரணையைத் தொடங்கிவிட்டது. கிளாசிக் வாகனப் பதிவு எண் பிளேட்டுகள் பல ஆயிரம் ரிங்கிட்டிற்கு விற்கப்படுவதாக புகார் எழுந்திருக்கிறது.

      உயர்நெறிப் பிரிவு இந்தப் பணிக் குழுவின் செயலகமாகச் செயல்படும். சிறப்புப் பணிக் குழுவுக்குத் தேவையான அனைத்து தகவல்களையும் இந்த செயலகம் வழங்கி,  புலன் விசாரணை தங்குத் தடையின்றி சீராக நடப்பதை உறுதி செய்யும்.

      இந்தப் பணிக் குழுவில் ஜேபிஜே உயர்நெறிப் பிரிவு எம்ஏசிசி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்,  போக்குவரத்து அமைச்சின் நில, உயர்நெறிப் பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த நிபுணர்கள் இடம் பெற்றிருப்பர்.

      இச்சிறப்புப் பணிக் குழுவில் இடம் பெறவிருக்கும் உறுப்பினர்களின் முழுப் பட்டியல் திங்கட்கிழமை உறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்று ரோஸ்பியாகோஸ் கூறியதாக அந்த ஏடு தெரிவித்தது.

      ஜேபிஜேண்டோரா ஆவணங்கள் தொடர்பில்  கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவித்தார். அதேசமயத்தில்  அமைச்சின் உயர்நெறி பிரிவுடன் இணைந்து ஒரு சிறப்புப் பணிக் குழுவை அமைக்கவேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

      ஜேபிஜேண்டோரா ஆவணங்களில் இடம் பெற்றுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் சிறப்புப் பணிக் குழு முழுமையாக புலன் விசாரணை செய்யும். கிளாசிக் வாகன எண் பதிவு பிளேட்டுகளுக்குப் பதிவு செய்யும்  நடைமுறைகளில் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துவதற்கு  இந்தப் பணிக் குழுவின் பரிந்துரைகள் பயன்படுத்தப்படும் என்று அந்தோணி லோக் தெரிவித்திருந்தார்.

      இந்த விவகாரத்தில் ஜேபிஜே அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருப்பதாக 28 பக்கங்கள் கொண்ட ஜேபிஜேண்டோரா ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதே சமயம்,  2007ஆம் ஆண்டிலிருந்து  மாநில வாரியாக இந்த கிளாசிக் வாகன  பிளேட் எண்களும்  அதில் பட்டியலிடப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here