சிங்கப்பூர்:
அழகு ஆராதிக்கப்படும் தற்போதைய உலகில் ஆங்காங்கே அழகு நிலையங்கள் முளைத்துவிட்டிருக்கின்றன. அந்நிலையில் சிங்கப்பூரில் தனது கண்களைச் சுற்றிலும் உள்ள தோல் சுருக்கங்களைத் தற்காலிகமாகக் குறைக்கும் சிகிச்சைக்குச் சென்ற ஒரு பெண் அண்மையில் தனது கண்பார்வையை இழந்த சோக சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த அழகு சிகிச்சையின்போது அவரது தோலுக்கு அடியில் ஊசிவழி நிரப்பப்பட்ட மருந்து இரத்த ஓட்டத்தில் கலந்ததே அதற்குக் காரணம் என்று அந்த மருந்தை விநியோகிக்கும் நிறுவனம் கூறியுள்ளது.
நிரப்புமருந்தை சிங்கப்பூரில் விநியோகிக்கும் பர்வஸ் நிறுவனம், சிகிச்சையின்போது தவறுதலாக இரத்த ஓட்டத்தில் மருந்து கலந்ததால் அடைப்பு ஏற்பட்டு பார்வை பறிபோனதைக் கண்டறிந்ததாகக் கூறியது.
இவ்வாண்டு ஜூலை மாதம், ரெட்ஹில்லில் உள்ள ஒரு மருந்தகத்தில் அந்தப் பெண் சிகிச்சை பெற்றார். ‘அஸ்தஃபில்’ எனும் தென்கொரிய நிரப்புமருந்து அவரது தோலுக்கு அடியில் ஊசிவழி ஏற்றப்பட்டது.
அந்தப் பெண் 30 வயதைக் கடந்த சிங்கப்பூரர் என்று கூறப்படுகிறது. ஆனால், நோயாளியின் அடையாளத்தைப் பாதுகாக்க, பர்வஸ் நிறுவனப் பேச்சாளர் மேற்கொண்டு விவரம் வெளியிடவில்லை.
அழகியல் சிகிச்சை பெற விரும்புவோர் முறையான பயிற்சிபெற்ற மருத்துவர்களை மட்டுமே நாடவேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.
சம்பவம் பற்றி திங்கட்கிழமை செய்தி வெளிவந்தபின், குறித்த சிகிச்சை செய்த மருந்தகம் செவ்வாய்க்கிழமையிலிருந்து மூடப்பட்டிருக்கிறது.
இந்தச் சம்பவம் குறித்து அந்நாட்டு சுகாதார அறிவியல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.