அமெரிக்க விபத்தில் உயிரிழந்த மாணவி; கேலியாக பேசிய போலீசார்- கெளரவிக்கும் பல்கலைக்கழகம்

அமெரிக்காவின் நார்த்ஈஸ்ட் பல்கலை கழகத்தில் படித்து வந்த மாணவி ஜானவி கண்டுலா (வயது 23). ஆந்திர பிரதேச மாநிலத்தில் இருந்து படிப்பதற்காக அவர் அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையில், இந்த ஆண்டு ஜனவரியில் தெரு ஒன்றை கடந்து செல்லும்போது, சியாட்டில் நகர போலீஸ் வாகனம் ஒன்று அவர் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. இதில், அவர் உயிரிழந்து உள்ளார்.

இந்நிலையில், அந்த பல்கலை கழகத்தின் வேந்தர் கென்னத் ஹென்டர்சன் கூறும்போது, கண்டுலா மறைவை அடுத்து, அவருக்கு பட்டமளிக்க திட்டமிட்டு இருக்கிறோம். இதனை அவருடைய குடும்பத்திற்கு வழங்க இருக்கிறோம் என கூறியுள்ளார். நடந்து வரும் விசாரணையானது, நீதியையும் மற்றும் இந்த சம்பவம் நடந்ததற்கான பொறுப்புணர்வையும் கொண்டு வரும் என நம்புகிறேன் என உறுதிப்பட கூறினார்.

அடுத்த வாரம் பல்கலைக்கழக வளாகத்தில், நல்லிணக்கம் சார்ந்து எங்களுடைய மாணவர்கள் ஒன்றாக கூடக்கூடிய நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றும் அதுபற்றிய பல்கலை கழகத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது. இந்த சம்பவத்தின்போது, வாகனம் மணிக்கு 74 மைல் வேகத்தில் சென்றுள்ளது என தெரிய வந்துள்ளது. காவல் அதிகாரி கெவின் தவே என்பவர் இந்த வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார்.

இந்த விசாரணையில் ஈடுபட்டு வந்த சியாட்டில் காவல் துறை துணை தலைவரான டேனியல் ஆடிரர் என்பவர் சக அதிகாரி ஒருவரிடம் இந்த வழக்கு பற்றி பேசிய விசயங்கள் அவருக்கு எதிராக திரும்பியுள்ளன. டேனியல் தன்னுடைய உடலில் இருந்த கேமிராவை தவறுதலாக ஓட விட்டபடி இருந்திருக்கிறார். அதில் அவர் பேசிய விசயங்கள் பதிவாகி உள்ளன.

அவர், மைக் சோலன் என்ற அதிகாரியுடன் இந்த கொடிய விபத்து பற்றி சிரித்து கொண்டே கூறுகிறார். இந்த வீடியோ பதிவில், அந்த அதிகாரியின் (கெவின் தவே) தவறு எதுவும் இல்லை என்று மறுத்ததுடன், இதில் குற்ற விசாரணை எதுவும் தேவையில்லை என்றும் கூறுகிறார்.

அந்த மாணவி 40 அடி தொலைவுக்கு தூக்கி வீசப்பட்டு இருப்பார் என நான் நினைக்கவில்லை. ஆனால், அவள் உயிரிழந்து விட்டாள் என கூறி விட்டு சிரிக்கிறார். தொடர்ந்து டேனியல் பேசும்போது, அந்த மாணவிக்கு இழப்பீடாக பணம் கொடுக்க வேண்டும் என கூறி விட்டு, பலத்த சிரிப்பொலியை வெளிப்படுத்துகிறார். பின்பு அவர் அவளுக்கு 26 வயதே ஆகிறது. அவளுக்கு குறைவான மதிப்பே உள்ளது என்று கூறுகிறார். எனினும், இந்த கேமிராவில் சோலன் கூறிய விசயங்கள் பதிவாகவில்லை. இதுபற்றி துறை சார்ந்த விசாரணை நடந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here