கோலாலம்பூர்:
ரஹ்மா அரிசி விற்பனைத் திட்டம் நேற்று தொடங்கியபோது இறக்குமதி செய்யப்பட்ட அரிசிகள், உள்நாட்டு அரிசிகளின் விலையைப்போல் விற்பனை செய்யப்பட்டன.
வசதி குறைந்த குடும்பங்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில் சந்தை விலைக்குக் குறைவாக இவை விற்பனை செய்யப்பட்டதாக உள்நாட்டு வாணிப, வாழ்க்கைச் செலவினத்துறை துணையமைச்சர் ஃபுஸியா சாலே கூறினார்.
ரஹ்மா அரிசி விற்பனைத் திட்டத்தின் வழி உள்நாட்டு அரிசி 5 கிலோவுக்கு 13 முதல் 14 ரிங்கிட் வரை விற்பனை செய்யப்பட்டு வரும் வேளையில் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியும் அதே விலைக்கு விற்பனை செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.
உள்நாட்டு அரிசி 5 கிலோவுக்கு 13 ரிங்கிட்டிற்கு விற்கப்படும் வேளையில் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியையும் அதே 13 ரிங்கிட்டிற்கு விற்பனை செய்வதற்குத் தமது அமைச்சு முன்வந்துள்ளதாக நேற்று தலைநகரில் பயனீட்டாளர் வர்த்தகம் மீதான கருத்தரங்கை ஒன்றைத் தொடக்கிவைத்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மக்களின் வாழ்க்கைச் செலவினத்தைக் குறைக்கும் வகையில் ரஹ்மா விற்பனைத் திட்டத்தை மேற்கொள்வதற்காக அரசாங்கம் தமது அமைச்சுக்கு இதற்கு முன்பு 15 கோடி ரிங்கிட் மானியத்தை ஒதுக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடக்கத்தில் தமது அமைச்சுக்கு 10 கோடி ரிங்கிட் மட்டுமே வழங்கப்பட்டது. பின்னர் பிரதமர் கூடுதலாக 5 கோடி ரிங்கிட்டை வழங்கினார். இதனைத் தொடர்ந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசிகளுக்கு உதவித் தொகைகளை வழங்கி அதனை மலி வான விலையில் மக்களுக்கு விற்பனை செய்வதற்குத் தமது அமைச்சு முன்வந்துள் ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பி40, அடுக்குமாடி வீடுகள், பிபிஆர் வீடமைப்புத் திட்டங்கள் ஆகிய பகுதிகளிலும் இந்த ரஹ்மா அரிசி விற்பனைத் திட்டம் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.