மலாக்கா :
கடந்த செப்டம்பர் 10 முதல் காணாமல் போனதாகக் கூறப்பட்ட R.டர்வின்ராஜ், 24 கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் அவரின் 6 நண்பர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கத்தியால் குத்தப்பட்டு, எரியூட்டப்பட்ட நிலையில் அவரின் சடலத்தை காவல்துறையினர் மீட்டனர்.
இந்நிலையில், இக்கொலை சம்பவம் தொடர்பில் போலீசார் மேற்கொண்ட தொடர் விசாரணையில் பாதிக்கப்பட்டவரின் நண்பர்கள் என நம்பப்படும் 18 முதல் 26 வயதுக்கு உட்பட்ட அறுவரை கைது செய்ததாக, மலாக்கா மாவட்ட காவல்துறை தலைவர் டத்தோ ஜைனோல் சமா கூறினார்.
குறித்த 6 சந்தேக நபர்களும் செப்டம்பர் 24ஆம் தேதி வரை அவர்கள் தடுப்பு காவலில் வைக்கப்படவுள்ளனர் என்றும் குற்றவியல் சட்டத்தின் 302 ஆவது பிரிவின் கீழ் விசாரணைகள் நடந்து வருகிறது என்று டத்தோ ஜைனோல் சமா கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் போலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக கூறிய அவர், கடந்த வருடம் தீபாவளியின் போது சந்தேக நபர் மற்றும் பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு அருகில் உள்ள ஹவுசிங் எஸ்டேட் பகுதியில் பட்டாசுகளை கொண்டு வந்ததில் ஏற்பட்ட தவறான புரிதலே இந்த சம்பவத்திற்கு காரணம் எனக் கூறினார்.
போலீஸ் விசாரணை தொடர்கிறது.