இறந்த பிறகுதான் குடியுரிமை கிடைக்குமா? சரஸ்வதி, வசந்தா கண்ணீர்!!!

(டில்லிராணி முத்து)  தெலுக் இந்தான்,
வ்வுலகை விட்டு மறைந்த பிறகுதான் எங்களுக்கு இந்நாட்டின் குடியுரிமை கிடைக் குமா என்று கண்ணீர் மல்கக் கேள்வி எழுப்புகின்றனர் ஜாலான் சங்காட் ஜோங், தெலுக் இந்தானைச் சேர்ந்த சரஸ்வதி த/பெ கோபால் (72 வயது), வசந்தா த/பெ மணியம் (60 வயது) ஆகிய இருவரும்.
மலேசிய மண்ணில் பிறந்து வளர்ந்தும் எங்களுக்கு இன்றுவரை நீல நிற அடையாள அட்டை கிடைக்கவில்லை. நாட்டின் குடியுரிமைக்காக பலமுறை போராடி வாழ்க்கை யும் கழிந்து விட்டது. வந்தேறிகள் போலத்தான் நாங்கள் இங்கு வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறோம் என மிகவும் வேதனையுடன் சரஸ்வதியும் வசந்தாவும் கூறினர்.
தெலுக் இந்தான், ஈப்போ, புத்ராஜெயா என பலமுறை பதிவிலாகாவின் வாசல்களை ஏறி இறங்கியதுதான் மிச்சம். ஒவ்வொரு முறையும் அங்கு செல்லும்போதெல்லாம் எங்களின் விண்ணப்பங்கள் தேர்வாகவில்லை (tidal lulus) என்ற ஒரே பதிலில் சொல்லி முடித்து விடுவார்கள்.
பலமுறை பல அரசியல் தலைவர்களின் உதவியையும் நாடினோம். ஆனால் எந்த வொரு பலனும் இல்லை. குடியுரிமை இல்லாத காரணத்தினால் எங்கு சென்றாலும் பல சிக்கல்களையும் இன்னல்களையும் மட்டுமே சந்தித்து வருகிறோம்.
டத்தோஸ்ரீ சம்சுல் இஸ்கண்டார்
கணவர்களை இழந்து ஏழ்மை நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற எங்களுக்கு அரசாங்கத்தின் எந்தவோர் உதவிகளும் சலுகைகளும் இதுவரை கிடைத்ததே இல்லை என அவ்விருவரும் மிகுந்த வேதனையுடன் தெரிவித்தனர்.
கணவர் இறந்த பிறகு தோட்டங்களில் கூலி வேலை செய்தும், உணவகங்களில் பாத்திரம், குவளைகள் கழுவும் வேலைகள் செய்தும் அதன்மூலம் கிடைத்த வருமானத்தைக் கொண்டுதான் மிகவும் சிரமப் பட்டு பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினோம்.
இப்போது எங்களின் இறுதி காலத்திலாவது அரசாங்கத்தின் உதவிகளும் சலுகைகளும் கிடைத்தால் எங்களின் வாழ்க்கையை ஓரளவு நகர்த்தி விடுவோம். கோவிட்-19 தொற்றுநோய் காலகட்டத்தில் பி40 தரப்பு ஏழை மக்களுக்கு அரசாங்கம் பிரி ஹாத்தின் நேஷனல் எனும் உதவித் தொகையை வழங்கி உதவியது.
கோவிட்-19 தொற்றுநோய் காலகட்டத்தில் நாங்களும் பல சிரமங்களையும் சிக்கல் களையும் எதிர்நோக்கினோம். ஆனால் எங்களுக்கு நீல நிற அடையாள அட்டை இல் லாத காரணத்தினால் அம்மாதிரியான எந்தவோர் உதவியும் கிடைக்கவில்லை.
எங்கள் இருவருக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கும் குடும்பம்  பிள்ளைகள் என ஏழ்மை நிலையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலை யில் நாங்களும் அவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை.
நாங்கள் இறப்பதற்குள் எங்களுக்கு நாட்டின் குடிமக்களாக நீல நிற அடையாள அட்டை கிடைத்து விட்டால் நிச்சயம் அரசாங்கத்தின் உதவி நிதி, சமூகநல இலா காவின் உதவித் தொகை என அனைத்தும் கிடைப்பதற்கு வாய்ப்புண்டு.
அதை வைத்துக் கொண்டு எங்களின் மருத்துவச் செலவுகளையும் சமாளித்துக் கொள் வோம். இந்த வயதான காலத்தில் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு எங்களால் வேலை செய்ய முடியும்? உடம்பில் தெம்பு இருக்கும் வரை தான் வேலை செய்ய முடியும். ஒரு காலகட்டத்திற்குப் பிறகு நிச்சயம் எங்கள் உடம்பிலும் தெம்பு இருக்காது என்று மூதாட்டிகள் சரஸ்வதியும், வசந்தாவும் குறிப்பிட்டனர்.
வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்து வேலை செய்யும் வெளிநாட்டவர்களுக்கு கூட இந்நாட்டின் குடியுரிமை வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் இங்கேயே பிறந்து, வளர்ந்து, இம்மண்ணிலே வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களுக்கு இன்றுவரை குடியுரிமை கிடைக்காததது தான் பெரும் ஏமாற்றமாகவும் மிகவும் வேதனையாகவும் உள்ளது என அவ்விருவரும் தங்களின் மனக் குமுறல்களை வெளிப்படுத்தினர்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ சம்சுல் இஸ்கண்டார், பாகான் டத்தோ பாக்காத்தான் ஹராப்பான் தலைவராக நியமிக்கப் பட்டதைத் தொடர்ந்து சிவப்பு நிற அடையாள அட்டை கொண்டவர்களுக்கு குடியுரிமை பெற்றுத் தரும் முயற்சியில் களம் இறங்கியுள்ளார் என்றும் பலருக்கும் வெற்றி கரமான முறையில் குடியுரிமை பெற்றுத் தந்துள்ளார் என்றும் கேள்வியுற்றோம்.
எனவே எங்களின் நலனிலும் அக்கறைக் கொண்டு நாங்கள் இம்மண்ணை விட்டு மறையும் முன் எங்களுக்கும் டத்தோஸ்ரீ சம்சுல் இஸ்கண்டார் நாட்டின் குடியுரிமை பெற்றுத் தந்து நீல நிற அடையாள அட்டை கிடைக்க வழி செய்ய வேண்டும் என சரஸ்வதியும், வசந்தாவும் தங்களின் இரு கரம் கூப்பிக் கேட்டுக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here