ஹாங்ஜோ: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 200 மீட்டர் ஓட்டத்தில் சிங்கப்பூரின் சாந்தி பெரேரா தங்கம் வென்று சாதனை படைத்தார்.இதன்மூலம், சிங்கப்பூரின் 49 ஆண்டுகாலக் காத்திருப்பு முடிவுக்கு வந்தது.
நாலாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், திடல்தட விளையாட்டில் கடைசியாக 1974ஆம் ஆண்டு சீ சுவீ லீ தங்கம் வென்றிருந்தார். டெஹ்ரானில் நடந்த அப்போட்டிகளில், பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் அவர் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியிருந்தார்.
திங்கட்கிழமை இரவு நடந்த இறுதிப் போட்டியில் சாந்தி 23.03 வினாடிகளில் பந்தயத் தொலைவை முதல் ஆளாக ஓடிக் கடந்தார். முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை நடந்த தகுதிச் சுற்றிலும் இவரே அதிவேகமாக ஓடியிருந்தார். ஆசிய விளையாட்டுப் போட்டிக ளில் சாந்தி கைப்பற்றிய முதல் தங்கப் பதக்கம் இதுதான்.முன்னதாக, 100 மீட்டர் ஓட்டத்தில் அவர் வெள்ளிப் பதக்கத்தைத் தனதாக்கியிருந்தார்.இப்பந்தயத்தில் சீன வீராங்கனை வெள்ளியும் பஹ்ரேன் வீராங்கனை வெண்கலமும் வென்றனர்.
பின்னர் வெற்றி மேடையை அலங்கரித்தபொழுது, தாய்நாட்டிற்காகப் பெருமை தேடித் தந்த உணர்வில் அவர் ஆனந்தக் கண்ணீர் உகுத்தார். இந்த ஆண்டு சாந்திக்கு மகத்தான ஆண்டாக இருந்து வருகிறது.கடந்த மே மாதம் கம்போடியாவில் நடந்த தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீ., 200 மீ., இரண்டிலும் தங்கப் பதக்கத்தை சாந்தி தன்வசப்படுத்தியிருந்தார்.
பின்னர் ஜூலை மாதம் நடந்த ஆசியத் திடல்தட வெற்றியாளர் போட்டிகளின் அவ்விரு பந்தயங்களிலும் அவரே வாகை சூடியிருந்தார்.அதன்பின் ஆகஸ்ட்டில் நடந்த உலகத் திடல்தட வெற்றியாளர் போட்டிகளின் 200 மீட்டர் ஓட்டத்தில் அரையிறுதிக்கு முன் னேறிய சாந்தி, அப்பெருமையைப் பெற்ற முதல் சிங்கப்பூரராகவும் திகழ்ந்தார்.
அப்போட்டியில் 22.57 நொடிகளில் பந்தயத் தொலைவை ஓடிக் கடந்ததன் மூலம் அடுத்த ஆண்டு பாரிசில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கும் அவர் தகுதி பெற்றார்.