வீடுகளுக்குள் புகுந்து சீறும் கருநாகங்கள் பீதியில் குடியிருப்பாளர்கள்!!!

(News by our reporter டில்லிராணி முத்து)
புக்கிட் ரோத்தான்:
புக்கிட் ரோத்தான், தாமான் இராஜாவலி, ஜாலான் மெரந்தியில் உள்ள காலி வீடு ஒன்றை சுற்றிலும் காடு போல் புதர் மண்டிக் கிடப்பதால் பாம்புகள், உடும்புகள், விஷ ஜந்துக்கள் ஆகியவற்றின் தொல்லைகளுக்கு மத்தியில் வாழ வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டிருக்கிறது என்று அங்கு வசிப்போர் முறையிட்டனர்.
இக்குடியிருப்பில் உள்ள 17ஆம் எண் வீடு ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கும் மேல் காலியாகக் கிடக்கின்றது. அக்காலி வீட்டைச் சுற்றிலும் மண்டிக்கிடக்கும் புதர்க்காடுகளிலிருந்து வெளியேறும் கருநாகங்கள், கட்டுவிரியன் பாம்புகள் என பல விஷ ஜந்துக்களும், பெரிய பெரிய உடும்புகளும் இங்கே சர்வசாதாரணமாக வீட்டின் முன் நடமாடுவது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்துகின்றது.
இதனால் தினம் தினம் பயத்தில் தான் வாழ்ந்து வருகிறோம். வீட்டுக்குள் எப்போது பாம்புகள் நுழையும் என்றே கணிக்க முடியாத  நிலையில் வாழ்கிறோம். காலை, நண்பகல், இரவு என எந்த நேரத்திலும் கருநாகங்கள் வீட்டுக்குள் நுழைந்து சீறுகின்ற பயங்கரமும் இங்கு அடிக்கடி நிகழ்ந்திருக்கிறது என அக்காலி வீட்டருகே வசிக்கும் ஜெயலட்சுமி வடிவேலு, கல்பனா பலராமன், கோபாலகிருஷ்ணன் எல்லப்பன் ஆகியோர் கூறினர்.
வன விலங்குகளைக் காண நாங்கள் மிருகக்காட்சி சாலைக்குச் செல்ல தேவையில்லை. காரணம் மிருகக்காட்சி சாலையிலும் காடுகளிலும் இருக்க வேண்டிய வன விலங்குகள் எல்லாம் மக்கள் குடியிருக்கும் வசிப்பிடத்தில் நடமாடுகின்றன.
மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வன விலங்குகள் இங்கு அடிக்கடி நடமாடுவதால் எங்களால் இங்கு நிம்மதியாகவே வாழ முடியவில்லை. தினம் தினம் எங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் வாழ்ந்து வருகிறோம். எங்கள் பிள்ளைகளையும்,  பேரப்பிள்ளைகளை வெளியில் விளையாட விடுவதற்குகூட மிகவும் பயமாக உள்ளது என்று  அவர்கள் அனைவரும் குறிப்பிட்டனர்.
மேலும் முட்டிக்காலுக்கும் மேல் புல் மண்டிக் கிடப்பதால் இங்கு  அதிகமான கொசுத் தொல்லையும் உள்ளது. அளவுக்கு அதிகமான கொசுக்கடியாலும் பூச்சிக்கடியாலும் அடிக்கடி அரிப்பு ஏற்பட்டு குடியிருப்பாளர்களின் உடம்பு முழுவதும் தடித்து காணப்படுவதாகவும் அவர்கள் மேலும் கூறினர்.
ஆளில்லாமல் காலியாகக் கிடக்கும் அவ்வீட்டினால் தான் எங்கள் பல பிரச்சினைகளும் சிக்கல்களும் ஏற்படுகின்றன. சம்பந்தப்பட்ட அக்காலி வீட்டின் உரிமையாளர்கள் தற்போது எங்கு வசிக்கிறார்கள் என்றே தெரியவில்லை. 20 வருடங்களுக்கு முன்பு இவ்வீட்டின் உரிமையாளர்கள் இறந்து விட்டனர். அதன்பிறகு அவர்களின் பிள்ளைகள் கூட இங்கு வருவதில்லை. அவர்களின் தொடர்பு எண் இல்லாததால் அவர்களை தொடர்புக் கொள்ளவும் எங்களால் முடியவில்லை. இப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்றே எங்களுக்கு தெரியவில்லை.
எந்தவொரு பிரச்சினையும் இன்றி நாங்கள் இங்கு தொடர்ந்து நிம்மதியாக வாழ்வதற்கு கோலாசிலாங்கூர் நகராண்மைக்கழகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட குடியிருப்பாளர்கள் அனைவரும் கேட்டுக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here