வாடிக்கையாளரை கத்தியால் குத்திய சிக்கின் ரைஸ் விற்பனையாளர்- பினாங்கில் சம்பவம்

ஜார்ஜ்டவுன்:

நேற்று லீபு சிசில் பொதுச் சந்தையில், சிக்கின் ரைஸ் விற்பனையாளர் ஒருவர் வாடிக்கையாளர் என நம்பப்படும் ஒருவரை கத்தியால் குத்தியதில் அவர் முகம், கால்கள் மற்றும் வயிற்றில் பலத்த காயம் அடைந்தார்.

26 வயதான பாதிக்கப்பட்டவர் பின்னர் மேல் சிகிச்சைக்காக பினாங்கு மருத்துவமனைக்கு (HPP) அனுப்பப்பட்டார், இப்போது அவர் உடல் நிலை சீராக உள்ளது என்று வடகிழக்கு மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் சோஃபியன் சாண்டோங் கூறினார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக நேற்று மதியம் 3 மணிக்கு தமக்கு அழைப்பு வந்தது என்றும், உடனே அந்த இடத்திற்கு வந்து பார்த்தபோது, ​​கத்தியால் குத்தப்பட்டதில் இரத்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர் காணப்பட்டதாகவும், கத்தியால் குத்திய ஆடவர் தப்பி ஓடிவிட்டார் என்றும் அவர் கூறினார்.

அதன் பின்னர் 51 வயதான சந்தேக நபர் மாலை 6.30 மணியளவில் மக்குல்லம் நெடுஞ்சாலை பகுதியில் வைத்து வெற்றிகரமாக கைது செய்யப்பட்டதாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறினார்.

“முதற்கட்ட விசாரணையின் முடிவுகளில், இந்தச் சம்பவத்துக்கு கடன் தொடர்பான பிரச்னையே காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் சந்தேகநபருக்கு எதிராக போதைப்பொருள் தொடர்பான கடந்தகால பதிவுகள் இருப்பதாகவும், மேலதிக விசாரணைக்காக சந்தேகநபருக்கு விளக்கமறியலில் வைக்கப்படுவார் என்றும் சோஃபியன் கூறினார்.

“இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 326 இன் படி விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்,

மேலும் குறித்த சம்பவம் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் விசாரணை அதிகாரியை 04-2181831 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு வந்து தகவல் தந்து உதவுமாறும் அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here