இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் 7வது நாளாக நீடிக்கிறது. ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது திடீரென 5,000க்கும் மேற்பட்ட எறிபடைகளை வீசித் தாக்கினர். அதன்பின்னர் இஸ்ரேல் அதிகாரபூர்வமாக போர் பிரகடனம் செய்து பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பலர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்து உள்ளனர்.
கொரில்லா யுத்தம், மரபுவழி ராணுவ யுத்தம், முப்படைகள் யுத்தம் தாண்டி நிலக்கீழ் யுத்த பாணி அண்மைய வரலாறுகளில் அதிகம் பேசப்படாதவை.. இப்போது பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு மூலம் அனைத்துலக அரங்கில் பேசு பொருளாகி இருக்கிறது ‘நிலக்கீழ்’ யுத்த பாணி.
இந்த நிலையில், இஸ்ரேல் ராணுவம், விமானம் மூலம் ஹமாஸின் சுரங்கப்பாதை பகுதிகளைக் குறி வைத்து தாக்குதல் நடத்தி வருவதாகவும் ஹமாஸின் ஆயுதக் கிடங்குகளையும் சுரங்கப் பாதைகளையும் முற்றிலும் அழிப்பதே தங்களின் அடுத்த கட்ட நடவடிக்கையாக இருக்கும் என்றும் இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய ராணுவத்தின் தொழில்நுட்பத்திற்கு ஹமாஸ் ஈடாகமுடியாது என்றாலும், ஹமாஸ் போராளிக் குழுவின் பலமாக அந்த ரகசிய நிலத்தடி சுரங்கங்களின் பரந்த கட்டமைப்பு உள்ளது.
சுதந்திர பாலஸ்தீனம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 1987ல் தோன்றிய ஹமாஸ் இயக்கம், 2007ல் ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு காஸா பகுதியில் உள்ள பாலஸ்தீன மக்களிடம் செல்வாக்கு பெற்றது.
51 கிலோ மீட்டர் நீளமும் 21 கிலோமீட்டர் அகலமும் கொண்ட சிறிய செவ்வக வடிவ காஸா பகுதியில், இஸ்ரேலின் ராணுவத்தை மீறியும் அதன் உளவு அமைப்பான மொஸாட்டின் கண்களின் மண்ணை தூவியும் இயக்கத்தை செழிப்புடன் வழிநடத்த ஹமாஸ் மேற்கொண்ட திட்டம் சுரங்கப்பாதைக் கட்டமைப்பு.
காஸா எல்லைப்பகுதியை ஒட்டி 60 கிலோமீட்டர் எல்லையில் நிலத்தடி பாதுகாப்பை உருவாக்க ஒரு பில்லியன் டாலருக்கும் மேலாக செலவழித்துள்ளது. மேலும் ‘இரும்புச் சுவர்’, ‘இரும்பு வாள்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய சுரங்கங்களை உருவாக்க மில்லியன்கணக்கான தொகையைச் செலவழித்துள்ளதாக புளூம்பெர்க் செய்தி கூறியுள்ளது.
கடந்த 2007 முதல் இயக்கத்தை வலுப்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்த ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேலின் விமானப்படைக்குச் சவால் விடும் வகையில் பதுங்கு குழிகளையும் சுரங்கப்பாதைக் கட்டமைப்புகளையும் உருவாக்கியுள்ளனர்.
எகிப்திலிருந்து காசா வரை ரஃபா நகர் வழியாக செல்லும் சுரங்கப்பாதை ஹமாஸின் சுரங்கப் பாதைகளில் மிகவும் நீளமானது. பொதுவாக 40 அடி அகலத்திற்கு கான்கிரீட் சுவர்களால் அமைக்கப்பட்டிருக்கும் இந்த சுரங்கத்தை வழித்தடமாக மட்டுமின்றி வாழ்விடமாகவும் ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
இஸ்ரேல் மீது அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் தொடங்கிய ஏவுகணைத் தாக்குதல்களில் இந்த சுரங்க உறைவிடங்கள் பெரும் பங்களிப்பு செய்திருப்பதாக அனைத்துலக ஊடகங்கள் கூறுகின்றன. இஸ்ரேலுக்குள்ளும் நீண்டிருக்கும் இந்த சுரங்கக்கள் வழியாகவே சரமாரி தாக்குதல்கள், ஊடுருவல்களை ஹமாஸ் நடத்தி இருக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாக பிடித்து சென்ற 100க்கும் மேற்பட்டோர் இத்தகைய சுரங்க உறைவிடங்களில்தான் அடைத்து வைக்கப்பட்டிருக்கக்கூடும் என்பது இஸ்ரேலின் சந்தேகம்.
இந்தச் சுரங்கங்கள் எங்கே தொடங்கி, எங்கே முடிக்கிறது, எங்கே வாயில்கள் இருக்கின்றன, எத்தனை நாடுகளை ஊடுருவிச் செல்கின்றன என்பதெல்லாம் அறியப்படாத ரகசியமாக உள்ளது.