நேருக்கு நேர் மோதிய ரயில்கள்.. 15 பேர் பலி.. 100-க்கும் மேற்பட்டோர் காயம்

டாக்கா: வங்காளதேசத்தில் பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த ரயில் விபத்தில் 15 பேர் பலியாகினர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வங்காளதேசத்தில் தண்டவாள பராமரிப்பு முறையாக இல்லாதது, சிக்னல்கள் பிரச்சினை உள்ளிட்டவற்றால் ரயில் விபத்துக்கள் அடிக்கடி நடைபெறுகின்றன. அந்த வகையில், வங்காளதேசத்தில் இன்று இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. வங்காளதேசத்தின் தலைநகரத்தில் இருந்து 60 கி.மீட்டர் தொலைவில் உள்ள கிழக்கு நகரமான பைரப் நகரில் இந்த விபத்து நேரிட்டது.

பயணிகள் ரயில் வந்த அதே தண்டவாளத்தில் சரக்கு ரயிலும் வந்ததால் இரண்டு ரயில்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் பயணிகள் ரயிலின் இரண்டு பெட்டிகள் தலைக்குப்புற கவிழ்ந்தன. இந்த கோர விபத்தில் ரயிலுக்குள் இருந்த பயணிகள் பலருக்கு படுகாயம் ஏற்பட்டது. ரயில் விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மீட்பு குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கிய பயணிகளை மீட்டனர்.

மாலை 4.30 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றது. தற்போது வரை மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை இந்த ரயில் விபத்தில் 15 பேர் பலியாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 100 க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
இது குறித்து வங்காளதேச அதிகாரி ஷதிகுர் ரகுமான் செய்தியாளர்களிடம் கூறுகையில், இதுவரை 15 பேர் உடல்களை மீட்டுள்ளோம். பலர் காயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரலாம். கவிழ்ந்து கிடக்கும் ரயில் பெட்டிகளுக்குள் பலரது சடலங்கள் கிடப்பதாக மீட்பு குழுவினர் கூறுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here