பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த 5 முதலைகள் கொல்லப்பட்டன – வனத் துறை

கோத்தா கினாபாலு:

பா மாநிலத்தில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்ததாக நம்பப்படும் ஐந்து முதலைகளை வனத் துறையினர் கொலை செய்துள்ளனர்.

மாநிலத்தின் கோத்தா பெலூட், லஹாட் டத்து மற்றும் தாவாவ் மாவட்டங்களில் பொதுமக்களை பெரிய முதலைகள் தாக்கின. அச்சம்பவங்களைத் தொடர்ந்து முதலைகளை வேட்டையாட வனத்துறையினர் களமிறக்கப்பட்டதாக சபா வனவிலங்கு பராமரிப்புத் துறை இயக்குநர் அகஸ்டின் தூகா தெரிவித்தார்.

“கோத்தா பெலூட், லஹாட் டத்து மாவட்டங்களில் நான்கு முதலைகளை சுட்டுவிட்டோம். தாவாவ் மாவட்டத்தில் எந்த முதலையும் இதுவரை கொல்லப்படவில்லை.

“கொல்லப்பட்ட முதலைகள், பொதுமக்களைத் தாக்கியவை என்பது உறுதிசெய்யப்படவில்லை. இருப்பினும், அவை பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகத் தோன்றின,” என்று அவர் திங்கட்கிழமை கூறினார்.

இந்த மூன்று மாவட்டங்களில் கடந்த ஒரு மாத காலமாக முதலைகள் தாக்கிய மூன்று சம்பவங்கள் பதிவாயின. தாக்கப்பட்டவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

செப்டம்பர் 22ஆம் தேதி கோத்தா பெலூட்டின் மன்டனானி படகுத் துறையில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த 20 வயது இளைஞர் முதலையால் தாக்கப்பட்டதாகப் புகார் தெரிவிக்கப்பட்டது.

அந்த இளைஞர் என்ன ஆனார் என்பது இப்போது வரை மர்மமாக உள்ளது என்று அதிகாரிகள் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here