டில்லிராணி முத்து
சுங்காய்:
ஃபேஸ்புக்கில் தமக்கு எதிராக உண்மையற்ற தகவலை பதிவேற்றம் செய்திருக்கும் நபருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க ஒருபோதும் நான் தயங்க மாட்டேன் என சுங்காய் சட்டமன்ற உறுப்பினரும் பேராக் மாநில சுகாதாரம், மனிதவளம், ஒற்றுமை, இந்தியர் நலப்பிரிவு ஆட்சிக்குழு உறுப்பினருமான சிவநேசன் அச்சலிங்கம் எச்சரிக்கை விடுத்தார்.

சுங்காய் சட்டமன்றத் தொகுதியில் சிலிம் ரிவர் சட்டமன்ற உறுப்பினரும் பேராங் சட்டமன்ற உறுப்பினரும் மட்டுமே சேவைகள் செய்வது போலவும் தாம் எதுவும் செய்யாதது போலவும் கூறும் அந்நபர் ஒருவேளை சுங்காய் சட்டமன்றத் தொகுதியில் உறுப்பினர் இல்லையென்றால் இத்தொகுதியில் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும் என்று மிகவும் அநாகரிகமாகவும் கீழ்த்தரமான அரசியல் செயலையும் மேற்கொண்டிருப்பதாக குறிப்பிட்ட சிவநேசன், அந்நபர் பெர்சத்துவின் உறுப்பினர் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
மேலும் தொடர்பு, இலக்கவியல் அமைச்சகம் இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்திய சிவநேசன், சம்பந்தப்பட்ட அந்நபருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் குறிப்பிட்டார். அதோடு இவ்விவகாரம் குறித்து சிவநேசனின் ஆதரவாளர்கள் அந்நபர் மீது சுங்காய் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.




















