முன்னாள் பிரதமரை கொலை செய்யப் போவதாக சமூக ஊடகத்தில் பதிவை வெளியிட்டதாக பெண் மீது குற்றச்சாட்டு

அம்பாங்:

3 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவின் எட்டாவது பிரதமராக பதவியேற்ற டான்ஸ்ரீ முஹிடின் யாசினைக் கொலை செய்யப் போவதாக சமூக வலைத்தளத்தில் பதிவை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில், சிங்கப்பூரில் உள்ள கிளினிக் உதவியாளர் ஒருவருக்கு எதிராக இன்று அம்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது.

இருப்பினும், குற்றம் சாட்டப்பட்ட தாய் ஜீ சிங், 31, என்பவருக்கு எதிராக நீதிபதி வான் முஹமட் நோரிஷாம் வான் யாக்கோப் முன்நிலையில், நீதிமன்ற மொழிபெயர்ப்பாளரால் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டவுடன், அவர் தான் குற்றமற்றவர் என்று கூறி, விசாரணை கோரினார்.

குற்றச்சாட்டுகளின்படி, மற்றவரை புண்படுத்தும் நோக்கத்துடன், கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி மதியம் 12.35 மணிக்கு, ‘முஹிடின் பிரதமராக பதவியேற்றபோது அவரை கொல்ல ஒரு கொலையாளியை வாடகைக்கு அமர்த்த முடியுமா? என்ற பதிவை உருவாக்கி, பரப்பியதாக அந்தப் பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இக்குற்றம் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998 இன் பிரிவு 233 (1)(a)(ii) இன் படி, பிரிவு 233 (3) இன் கீழ் தண்டிக்கப்படும் குற்றச் செயல் நடந்ததாகக் கூறப்படுகிறது. இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக RM50,000 அபராதம் அல்லது அதிகபட்சமாக ஒரு வருடம் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஒரு தனிநபர் உத்தரவாதத்துடன் RM10,000 ஜாமீன் வழங்கியதுடன், குற்றம் சாட்டப்பட்டவர் சிங்கப்பூரில் படிப்பைத் தொடர்ந்ததால் கூடுதல் நிபந்தனை எதுவும் விதிக்கவில்லை, அத்தோடு இந்த வழக்கை டிசம்பர் 20-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here