பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இறங்கிய பொலிவியா! இஸ்ரேலுக்கு எதிராக அதிரடி

பாலஸ்தீனம் மீது 26ஆவது நாளாக இன்றும் இஸ்ரேல் கொடூர தாக்குதலை நடத்தி வரும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டுடனான தூதரக உறவை பொலிவியா துண்டித்துக்கொண்டிருக்கிறது. தற்போது காசா மீது இஸ்ரேல் கொடூர தாக்குதலை நடத்த கடந்த 7ம் தேதி நடந்த சம்பவம்தான் முக்கிய காரணம். அன்று யாரும் எதிர்பாராத விதமாக ஹமாஸ் படையினர் காசாவிலிருந்து இஸ்ரேல் மீது ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தினர். இஸ்ரேலுக்கு இப்படியான அச்சுறுத்தல் இருப்பது ஏற்கெனவே தெரியும்.

எனவே அது தனது பாதுகாப்புக்காக ‘அயன் டோம்’ அமைப்பை உருவாக்கி வைத்திருந்தது. சோகம் என்னவெனில் இந்த வலுவான தடுப்பையும் மீறி ஹமாஸ் ஏவிய ராக்கெட்கள் இஸ்ரேலுக்குள் பாய்ந்தது. இதில் 1,400 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கான பதில் தாக்குதலை இஸ்ரேல் பாதுகாப்புப்படை தொடங்கியுள்ளது. ஹமாஸை அழிப்பதாக கூறி கடந்த 24 நாட்களாக இஸ்ரேல் விமானப்படை கடுமையான தாக்குதலை தொடுத்து வந்தது. 25வது நாளாக இன்றும் இது நீடிக்கிறது. இந்த கொடூர தாக்குதலில் 8,525 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கடந்த 26ம் தேதி வரை வான் வழி தாக்குதலில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல் அதன் பின்னர் தரைவழி ஊடுருவலை தொடங்கியது. போர் தீவிரமடைந்த நிலையில் சமாதான பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தின.

போர் நிறுத்தம் குறித்து ஏற்கெனவே ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா கொண்டு வந்த தீர்மானங்கள் அனைத்தையும், அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டது. அதேபோல ஐநா பொது சபையில் போர் நிறுத்தம் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆனால் இதை ஏற்று, அமல்படுத்த வேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது. எனவே இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா, பிரிட்டன், பிரானஸ் உள்ளிட்ட நாடுகளில் மக்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான பொலிவியா, இஸ்ரேல் உடனான தூதரக உறவை துண்டித்துக்கொள்வதாக அறிவித்திருக்கிறது. இது குறித்து அந்நாட்டின் வெளியுறவு துணை அமைச்சர் ஃப்ரெடி மாமானி கூறுகையில், “காசா பகுதியில் நடைபெறும் ஆக்கிரமிப்பு மற்றும் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலை நிராகரித்தும் கண்டித்தும் இஸ்ரேலிய அரசுடனான தூதரக உறவுகளை முறித்துக் கொள்ள பொலிவியா மக்களும், அரசும் முடிவு எடுத்திருக்கிறது.இஸ்ரேல் தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். இதற்கு காரணமான தாக்குதல்கள் நிறுத்தப்பட்ட வேண்டும். மக்களின் வாழ்க்கை, சர்வதேச சட்டம் அல்லது சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மதிக்காத அரசாக இஸ்ரேலை நாங்கள் பார்க்கிறோம்” என்று கூறியுள்ளார். மேலும், காசாவுக்கு பொலிவியா உதவி பொருட்களை அனுப்பும் என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து கொலம்பியா மற்றும் சிலி உள்ளிட்ட நாடுகளும் தங்கள் தூதர்களை இஸ்ரேலிலிருந்து திரும்ப பெற்றிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here