இதய இரத்தக்குழாயில் அடைப்பு இருப்பதை ஆரம்பத்திலேயே அறிவது எப்படி?

ற்போது மாரடைப்பால் வயது வித்தியாசமின்றி நிறைய பேர் இறந்து வருகிறார்கள். ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம், இதயத்திற்கு செல்லும் இரத்தக்குழாய்களில் அடைப்புகள் ஏற்பட்டிருப்பது தான்.

இதய ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பை முன் கூட்டியே அறிந்து தடுக்க முடியுமா? அதற்கு செய்ய வேண்டிய பரிசோதனை என்ன? என்பது குறித்து தமிழ்நாட்டின் சிவகங்கை அரசு மருத்துவமனை பொது நல மருத்துவர் டாக்டர் அ.ப.ஃபரூக் அப்துல்லா தனது சமூக வலைத்தள பக்கத்தில் விரிவாக குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, வருடம் ஒரு முறை செய்யும் முழு உடல் பரிசோதனையில் டிஎம்டி (TMT) எனப்படும் ட்ரெட் மில் டெஸ்ட் இருப்பது நல்லது. ஓடும் இயந்திரத்தில் நாம் ஓடும் போது ஏற்றம் பெறும் நமது இதயத்துடிப்பு , ஏறும் ரத்த அழுத்தம் மற்றும் இதயத்தின் மின் ஊட்டத்தை அளக்கும் ஈசிஜி எடுக்கப்படும். கொஞ்சம் கொஞ்சமாக ஓட்டத்தின் வேகம் அதிகரிக்கும் போது இதயத்தின் துடிக்கும் வேகம் அதிகரிக்கும்.

சாதாரணமாக இருக்கும் போது பிரச்சனை இல்லாமல் காட்டும் ஈசிஜி இவ்வாறு இதயத்துக்கு பளு கொடுக்கும் போது அதன் ரத்த நாளங்கள் சற்று சுருங்கும். அவ்வாறு சுருங்கும் போது அதன் தசைகளுக்கு சற்று ரத்த ஓட்டம் குறையும். அந்த ரத்த ஓட்டக்குறைபாடு ஈசிஜியில் மாற்றங்களாகத் தெரியும்.

இந்த டெஸ்ட் நெகடிவ் என்று வந்தால் இதயத்தின் ரத்த நாளங்களில் பெருமளவு அடைப்பு இல்லை என்று அர்த்தமாகிறது. இந்த டெஸ்ட் பாசிடிவ் என்று வந்தால் இதயத்திற்கு ஊட்டமளிக்கும் முக்கிய தமனிகளில் அடைப்பு இருக்கக்கூடும்.

இதற்கடுத்த பரிசோதனையாக ஆஞ்சியோகிராம் அறிவுறுத்தப்படும். இடுப்பு பகுதியிலோ அல்லது கையின் நாளம் வழியாக கேதிடர் எனும் கருவியை செலுத்தி இதயத்தின் ரத்த நாளங்களில் மை விட்டு பார்க்கும் போது, அங்கு அடைப்பு இருக்கிறதா? எந்த அளவு அடைப்பு இருக்கிறது? என்பது தெரியவரும்.

ரத்த நாளத்தின் விட்டம் பெருமளவு குறைந்திருந்தால் அங்கு ஸ்டெண்ட் வைக்கப்படும் முக்கிய தமனிகளில் அடைப்பின் சதவிகிதம் மிக அதிகமாக இருப்பின் பை பாஸ் அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டு காலில் இருந்து சிரை எடுத்து இதயத்தில் பைபாஸ் சிகிச்சை செய்யப்படும்.

நீங்கள் கூறுவதெல்லாம் சரி தான், ஆனால் சில வாரங்கள் முன்பு ட்ரெட் மில் பரிசோதனை செய்து நார்மல் என்று கூறப்பட்ட நபர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறக்கிறாரே எப்படி? என்று நீங்கள் நினைப்பது எனக்கு கேட்கிறது. ரத்த நாளத்தின் அடைப்பு அளவில் சிறியதாக இருந்தால் ட்ரெட் மில் பரிசோதனையில் பாசிடிவ் என்று வராது காரணம் அடைப்பு சிறியதாக இருப்பதால் இதயத்தின் தசைகளுக்கு நாம் ஓடும் போது கூட ரத்த ஓட்டம் குன்றாமல் இருக்கும்.

ஆனால் இத்தகைய அளவில் சிறிய அடைப்புகள் கூட திடீரென வெடிப்புக்கு உள்ளாகலாம். இதை PLAQUE RUPTURE என்கிறோம். இவ்வாறு அடைப்பு ஏற்பட்டு வெடிப்பு ஏற்படும் போது அங்கு தட்டணுக்கள் ஒன்றிணைந்து ரத்தக் கட்டியை உருவாக்கி ரத்த நாளத்தின் விட்டத்தை முழுமையாக அடைத்து விடுகின்றன. இதனால் மரணம் சம்பவிக்கிறது.

ட்ரெட் மில் பரிசோதனை மூலம் 70%க்கு மேல் உள்ள அடைப்புகளை சிறப்பாக அடையாளப்படுத்த முடியும். அதற்குக் குறைவாக உள்ள அடைப்புகளை ட்ரெட் மில் மிஸ் செய்வதற்கு வாய்ப்பு உண்டு என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். சில நேரங்களில் ட்ரெட் மில் பாசிடிவ் என்று வந்தாலும் இதயத்தின் ரத்த நாளங்களில்

பெரும் அடைப்பு இல்லாமல் மருத்துவ சிகிச்சையில் கட்டுப்படுத்தக் கூடிய அளவிலும் இருக்கும். அதை இதய நல நிபுணர் முடிவு செய்வார்.

நாற்பது வயதுக்கு மேல் உள்ளவர்கள் வருடம் ஒருமுறை ட்ரெட் மில் பரிசோதனை செய்து தங்களின் இதயத்தின் திறனை அறிந்து கொள்ளலாம். பாசிடிவ் வந்தால் பதட்டப்படத் தேவையில்லை. மருத்துவர் பரிந்துரையின் படி ஆஞ்சியோ செய்து அடைப்பு இருக்கிறதா? எந்த அளவில் இருக்கிறது? என்பதை தெரிந்து சிகிச்சை பெற முடியும்.

என்னைப் பொருத்தமட்டில் அதிக நேர ஓட்டம்/ ஜிம் ஒர்க் அவுட்களை ஆரம்பிக்க இருப்பவர்கள் தங்களின் இதயத்தின் திறனை அறிந்து கொள்ள ட்ரெட் மில் பரிசோதனை செய்து இதய நல நிபுணர் அறிவுரையைப் பெற்றுக் கொண்டு ஆரம்பிப்பது நன்று.

தங்களுக்கு இதயத்தில் இருக்கும் பிரச்சனைகளை அறியாமல் திடீரென அதிக ஓட்டம் / அதிக பளு தூக்குதல் போன்றவற்றை செய்வதால் மரணங்கள் நேர வாய்ப்புண்டு. எனவே வொர்க் அவுட் புதிதாக ஆரம்பிக்கும் முன்பு கார்டியாலஜிஸ்ட் ஒபினியன் அவசியமாகிறது. சிலர் தங்களுக்கு இருக்கும் ரத்தக் கொதிப்புக்கு சிகிச்சை எடுக்காமல் இதயத்தை பற்றியும் அறியாமல் வொர்க் அவுட் போன்ற இதயத்துக்கு கடுமையான பணி தரும் உடற்பயிற்சி செய்யும் போது மரணம் நிகழ்வதைக் காண்பது அதிகமாகி வருகிறது. இந்தக் கட்டுரை மூலம் ட்ரெட் மில் பரிசோதனை வழி எவ்வாறு இதய ரத்த நாள நோயைக் கண்டறிய முடியும் என்பதை அறிந்தோம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here