பி40 தரப்பினருக்கு புதிய சோதனை- அதிகரிக்கிறது இருதய நோய்ப் பாதிப்பு.

மலேசியாவில் இருதய நோய் தொடர்ந்து உயிர்க்கொல்லி நோயாக நீடித்து வருகின்றது. நம்பர்-1 உயிர்கொல்லி நோய் பட்டியலில் இருதய நோய் இன்னும் நீடித்து வருகிறது என்பதை சுகாதார அமைச்சும் உறுதி செய்திருக்கின்றது. 

2020ஆம் ஆண்டில் 18,515 மரணங்கள் பதிவான வேளையில் இவற்றுள் 17 விழுக்காடு மரணங்கள் இருதய நோயால் விளைந்தவை என்று சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் முகமட் ரட்ஸி அபு ஹசான் கூறியிருக்கின்றார். இருதய நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்காக அதிகமான பணம் செலவிடப்படுகிறது. இது நாட்டிற்கு நிதி ரீதியாக சுமையை ஏற்படுத்தியிருக்கின்றது என்று அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

2017ஆம் ஆண்டில் நாடு தழுவிய அளவில் சுகாதார சிகிச்சைக்கான செலவு 9.65 பில்லியன் ரிங்கிட் ஆகும். இதில் 3.93 பில்லியன் ரிங்கிட் இருதய நோயாளிக்கான சிகிச்சைக்காக செலவிடப்பட்டிருக்கிறது.

யார் யார் பாதிப்பு

பொதுவாக 41 வயது முதல் 59 வயதுடையவர்களும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களும் இருதய நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்பது தெரியவருகிறது. 2000ஆம் ஆண்டில் 11.6 விழுக்காடாக இருந்த இருதய நோயாளிகளின் எண்ணிக்கை 2020ஆம் ஆண்டில் 17 விழுக்காடாக அதிகரித்திருக்கிறது. இந்த அடிப்படையில் இருதய நோயைக் கட்டுப்படுத்துவதற்கும் தடுப்பதற்கும் மேற்கொள்ளப்படும் மருத்துவச் செலவு ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து அதிகரிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கோவிட்-19 நெருக்கடிக்குப் பிறகு 2021ஆம் ஆண்டில் இருதய நோயால் ஏற்பட்ட மரணங்கள் 13.7 விழுக்காடாக பதிவாகி இருந்ததை மலேசிய புள்ளி விவரத் துறை தகவல் கூறுகின்றது. இது மட்டுமன்றி இளம் வயதினர் இருதயநோயால் பாதிக்கப்படுவது தொடர்ந்து அதிகரிப்பது கவலை அளிப்பதாக உள்ளது.

பி40 தரப்பினருக்கும் பாதிப்பு

இந்த நிலையில் பி40 தரப்பைச் சேர்ந்த இளம் வயதினர் பலர் இருதய நோயால் பாதிக்கப்படுவதும் அவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதும் கவலை அளிப்பதாக இருக்கிறது என்று ஜோகூர், கேபிஜே மருத்துவமனையின் மருத்துவ நிபுணர் டாக்டர் முகமட் ஷாரோம் உஜாங் குறிப்பிட்டிருக்கிறார். தற்போதைய சுழ்நிலையில் இளம் வயதினர் இடையே இருதய நோய்ப் பிரச்சினை அதிகரிப்பதைக் காண முடிகிறது. குறிப்பாக, பி40 தரப்பைச் சேர்ந்த இளையோர் இருதய நோயால் பாதிக்கப்படுகின்றனர் எனவும் இவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டுக்கு அதிகரிப்பது கவலை அளிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

பாதிப்பு ஏன்?

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக முன்பு எம்40 பிரிவில் இருந்த பலர் தற்போது பி40 பிரிவுக்குத் தள்ளப்பட்டிருக்கும் சூழ்நிலையைக் காண முடிகிறது. பி40 தரப்பைச் சேர்ந்தவர்கள் மிக மிகக் குறைந்த வருமானத்தைப் பெறக்கூடியவர்கள். இவர்கள் பெரும்பாலும் ஏழ்மை நிலையில் இருக்கின்றனர். முன்பு எம் 40 பிரிவில் இருந்த பலர் இப்போது பி40 பிரிவுக்கு தள்ளப்பட்டிருப்பதால் பி40 பிரிவைச் சேர்ந்த மக்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும் தொடங்கியிருக்கிறது. இவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பலூன் போல பெரிதாகியே வருகிறது. ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கமே இருதய நோய்க்கு மிக முக்கியக் காரணியாக அமைந்திருக்கிறது என்று அவர் சுட்டிக் காட்டியிருக்கின்றார்.

உணவுகளால் உண்டாகும் பிரச்சினை

குறைந்த வருமானம் பெறுவோர் பெரும்பாலோர் கார்போஹைட்ரட் அதிகம் உள்ள சோறு போன்ற உணவுகளை மிக அதிகமாகச் சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது. இதுபோன்ற உணவுகளின் விலை மலிவாக இருப்பதால் குறைந்த வருமானம் பெறக்கூடியவர்கள் அதுபோன்ற உணவுகளை அதிகம் சாப்பிடுகின்றனர். அதுமட்டுமன்றி சோறு போன்ற உணவுகள் எளிதாகவும் கிடைக்கின்றன. அதோடு, பசியை அடக்கும் உணவாகவும் சோறு உள்ளிட்ட உணவுகள் விளங்குகின்றன. மலேசியர்களுள் பெரும்பான்மையினருக்கு சோறுதான் முக்கிய உணவாக இருக்கிறது. ஒரு நாளைக்குக் கூட சோறு உண்ணாமல் இவர்களால் இருக்க முடியாது. ஆனால், மிதமிஞ்சிய அளவு சோறு சாப்பிட்டால் அது சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். மிதமிஞ்சிய சோறு உள்ளிட்ட உணவுகள் ரத்தக் கொதிப்பை ஏற்படுத்தும். இதனால், இருதயப் பிரச்சினையும் உண்டாகும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

தவிர்ப்பது நல்லது

இருதய நோயாளிகளுக்கு நவீன மருத்துவத் துறையில் பலவிதமான மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன என்பது மறுக்க முடியாது. இருதயநோய்க்கு நிறைய மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், மருந்தை விட இருதய நோய் ஏற்படாமல் தவிர்ப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதே சிறந்த வழியாக அமைகிறது. உணவைத் தவிர்த்து புகைபிடிக்கும் பழக்கமும் இருதய நோய்க்கு காரணமாக அமைகிறது. 23 வயதை அடைந்த சிலருக்கு எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல் இருதயப் பிரச்சினை ஏற்படுவதும் கண்டறியப்படுகிறது.

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், புகை பிடித்தல் போன்ற தீயபழக்கங்களால் இருதயப் பிரச்சனை ஏற்படுவது தெரிய வருகிறது. கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்வதால் எந்தப் பலனும் இல்லை. ஆகவே, காலம் கடப்பதற்கு முன்பே உடல் நலத்திலும் இருதய நோய் உள்ளிட்ட நோய் பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இருதய நோயைச் சாதாரணமானதாகக் கருதிவிடக்கூடாது. ஏனெனில், அது இன்னும் நம்பர் -1 உயிர்க்கொல்லி நோயாகவே இருந்து வருகிறது. மௌனமாக இருந்து கொன்றுவிடக்கூடிய நோய் இருதய நோய் என்பதை நாம் எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும். சிலருக்கு உடல் ஆரோக்கியம் மிக மோசமான கட்டத்தை அடைந்த பிறகுதான் அவருக்கு இருதய நோய்ப் பாதிப்பு இருப்பதும் தெரியவருகிறது. ஆகவே, இந்த விஷயத்தில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வதன் மூலம் இருதய நோய்ப் பாதிப்பை நம்மால் விரட்டியடிக்க முடியும்.

சுகாதாரப்பரிசோதனை

மக்களிடையே, தொற்று அல்லாத நோய்களைக் கட்டுப்படுத்த மிகப் பெரிய அளவில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்று சுகாதார அமைச்சர் டாக்டர் சஸ்லி ஷாலான் கூறியிருக்கின்றார். இருதய நோய், புற்றுநோய், மூச்சுத்திணறல், நீரிழிவு ஆகிய நோய்களுக்கு எதிராக மருத்துவப் பரிசோதனை மிகப் பெரிய அளவில் மேற்கொள்ள அமைச்சு நிர்ணயித்திருக்கிறது. அமைச்சு வழங்கும் இந்த மருத்துவப் பரிசோதனைகளை மக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த நிலையில் இருதய மருத்துவ நிபுணரான பேராசிரியர் டாக்டர் சஸ்லி ஷாலான் காசிம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையின்படி நாடு முழுமையும் ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 1 லட்சம் இருதய நோயாளிகள் பதிவு செய்யப்படுகின்றனர் என்று கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இவர்களுள் 20 விழுக்காட்டினர் ஆண்கள். 30 விழுக்காட்டினர் பெண்கள். அதிக எண்ணெய்த் தன்மை உடைய உணவு, கொழுப்பு அதிகம் உள்ள உணவு, மிதமிஞ்சிய சீனி கொண்ட உணவு ஆகியவை இருதய நோய்க்கு முக்கியக் காரணங்களாக உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here