பெர்கேசோவின் சமூக நல உதவிகள்.

தீபாவளித் திருநாளை முன்னிட்டு அந்த மகிழ்ச்சியை வசதியற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் மனிதவள அமைச்சின் கிழ் இயங்கும் சமூக நலப் பாதுகாப்பு நிறுவனமான பெர்கேசோ ஈப்போவில் நேற்று பிரமாண்டமான அளவில் தீபாவளி பொது விருந்துபசரிப்பு நிகழ்ச்சியை நடத்தியது. இங்கு இம்பியானா ஹோட்டலில் நடைபெற்ற இந்தப் பொது உபசரிப்புக்கு மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் தலைமையேற்றார். மேலும், பெர்கேசோ வாரியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் அஸ்மான அஸிஸ் முகமட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறு நீரக சுத்திகரிப்பு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் என்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பெர்கேசோ மேலும் மூன்று சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்கியது. பெர்கேசோவின் குழுமத்தில் இடம்பெற்றுள்ள சிறுநீரக சுத்திகரிப்பு மையங்களில் இந்த இயந்திரங்கள் பொருத்தப்படும் என்று அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார். இதன்வழி பெர்கேசோ குழுமத்தில் இடம்பெற்றுள்ள சிறுநீரக சுத்திகரிப்பு மையங்களில் இன்னும் கூடுதல் எண்ணிக்கை நோயாளிகள் சிகிச்சை பெறலாம் என்று அவர் சொன்னார்.

மலேசியாவில் கடந்த 10 ஆண்டுகளில் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை உலகளவில் மிக அதிகமான ஒன்றாகப் பதிவாகி இருக்கிறது. இவர்களுல் பெரும்பகுதியினர் சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சைக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றனர். ஆசியாவிலேயே மலேசிய இதிலும் முன்னணியில் இருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு தொழிலாளர் வர்க்கத்தினருக்கு உதவும் வகையில் மனிதவள அமைச்சு பெர்கேசோ வழி இது போன்ற உதவிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

நேற்று வழங்கப்பட்ட மூன்று சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரஙகளில் இரண்டு தேசிய சிறுநீரக சுத்திகரிப்பு அறவாரிய மையத்திற்கும் மற்றொன்று வோ பொங் சியாங் சியா சங்கத்திற்கும் வழங்கப்பட்டது. நாட்டில் முன்னெடுக்கப்பட்டதில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் வரை பெர்கேசோ 46.84 மில்லியன் ரிங்கிட் செலவில் 1,171 சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரங்களை வாங்கி வழங்கி இருக்கிறது.

இதுபோன்ற தீராத நோய்களில் இருந்து விடுபட்டு தொழிலாளர்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்திட வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு தன்முனைப்பு, விழிப்புணர்வு, ஆலோசனை நிகழ்ச்சிகளையும் திட்டங்களையும் முன்னெடுப்பதில் பெர்கேசோ தீவிரமாகச் செயலபட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஆதரவற்ற பிள்ளைகள்,தனித்து வாழும் தாய்மார்கள் ஆகியோருக்கு ரொக்கப்பணம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

அதேபோல் ஈப்போ சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 9 சமூக நல இயக்கங்களுக்கும் உதவிகள் வழங்கப்பட்டன. இதனிடையே பெர்கேசோ தீபாவளி உபசரிப்பு நிகழ்ச்சியில் இந்தியர்களின் பாரம்பரிய நடனங்களும் இசை நிகழ்ச்சியும் மக்களை வெகுவாகக் கவர்ந்தன. தீபாவளிப் பண்டிகையை அனைத்து மலேசியர்களும் ஒன்றிணைந்து கொண்டாடும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here