அவனை ஏன் அடித்தேன் தெரியுமா? ரஜினி பட வில்லனின் விளக்கம்

பாலிவுட் நடிகர் நானா படேகர் ரஜினியின் ‘காலா’ திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இவர் தற்போது இயக்குனர் அனில் ஷர்மா இயக்கத்தில்  ‘Journey’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு உத்தரப்பிரதேசம் வாரணாசியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது தன்னிடம் செல்பி எடுக்க வந்த ரசிகரை நானா படேகர் தலையில் அடித்து விரட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் ‘ஒரு மனிதனை இப்படியா அடிப்பது’ என்று விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில், இது தொடர்பாக நானா படேகர் விளக்கமளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நான் ரசிகர் ஒருவரை அடிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது நான் நடிக்கும் படத்தில் வரும் ஒரு காட்சி. நாங்கள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தோம். முதல் ஒத்திகை காட்சி சரியாக வரவில்லை என்பதால் இரண்டாவது ஒத்திகைக் காட்சிக்கு தயாரானோம். அப்போது எதிர்பாராத விதமாக நீங்கள் வீடியோவில் பார்த்த அந்த இளைஞர் உள்ளே வந்துவிட்டார். நான் ரிகர்செல் என நினைத்து அந்த இளைஞரை அடித்து அனுப்பினேன்.

அவர் யார் என்று எனக்கு தெரியாது. அந்த இளைஞர் படக்குழுவைச் சேர்ந்தவர் என்று தான் நினைத்தேன். பின்தான், அவர் எங்கள் படக்குழுவைச் சேர்ந்தவன் இல்லை என்பது எனக்குத் தெரியவந்தது. உடனே நான், அவரை அழைக்க முயன்றபோது, அவர் அங்கிருந்து ஓடிவிட்டார். வீடியோ எடுத்தது அவரது நண்பராக இருக்கலாம் என நினைக்கிறேன். நான் யாரிடமும் புகைப்படங்களை எடுக்க வேண்டாம் என கூறியதில்லை. அப்படி சொல்லவும் மாட்டேன். இது தவறுதலாக நடந்த விஷயம். தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். நான் இனி இப்படி செய்யமாட்டேன்” என உருக்கமாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here