குடிசைகளுக்குள் வைத்து 32 பேர் உயிருடன் எரித்துக்கொலை: சூடானில் பயங்கரம்!

சூடான்:

தெற்கு சூடான் எல்லையில் அமைந்துள்ள அபெய் கிராமத்தில் 32 பேர் குடிசைகளுக்குள் வைத்து உயிருடன் எரித்துக்கொல்லப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சூடான் நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு போர் காரணமாக ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, ஐ-நா மேற்பார்வையில் சூடான், தெற்கு சூடான் என இருநாடுகளாக கடந்த 2011-ம் ஆண்டு பிரிக்கப்பட்டது.

எண்ணெய் வளம் இருப்பதாக கருதப்பட்ட எல்லையோர பகுதியான அபெய் கிராமம், தெற்கு சூடான் கட்டுப்பாட்டில் இருந்து வந்தாலும், ஐ.நா அமைதிப்படையினர் தொடர்ந்து பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தனர். தற்போது சூடானில் மீண்டும் அதிகாரப்போட்டி ஏற்பட்டுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவத்தின் சார்பில் ராணுவ தளபதி அப்தல் ஃபத்தா அல்-புர்கான் ஆட்சி செய்து வருகிறார். இந்நிலையில் அப்தல் மற்றும் துணைத்தளபதி மொகமத் ஹம்தன் டாக்லோ இடையேயான அதிகாரப்போட்டியால், ராணுவம் மற்றும் துணை ராணுவப்படைகளுக்கு இடையே உள்நாட்டு போர் நிகழ்ந்து வருகிறது.

இதில் இரு படைகளும் பொதுமக்களைத் தொடர்ந்து கொன்று குவித்து வருவதால், மக்கள் பெரும் அச்சத்துடன் வாழும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இதனிடையே, அபெய் கிராமத்திற்குள் நுழைந்த சூடான் ராணுவம் அங்கிருந்த 32 பேரை, குடிசைகளில் வைத்து உயிருடன் தீவைத்து எரித்துக்கொன்றிருப்பதாக தெற்கு சூடான் குற்றம்சாட்டியுள்ளது. இந்த சம்பவத்தில் ஐ.நா அமைதிப்படை வீரர் ஒருவரும் உயிரிழந்ததாக தெற்கு சூடான் தெரிவித்துள்ளது.

சூடான் ராணுவம்
சாமானிய மக்கள் மீதான இந்த தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ள தெற்கு சூடான் அரசு, சூடான் அரசு உடனடியாக பேச்சுவார்த்தை மூலம் தங்கள் நாட்டின் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா அதிகாரிகள், அபெய் பகுதியின் நிலை கவலையளிப்பதாகவும், இது போன்ற வன்முறைகளால், இருநாடுகளுக்கு இடையேயான எல்லை பங்கீடு பேச்சுவார்த்தைகள் தாமதமாகி வருவதாக தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here