காஸா:
இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே 46 நாட்களாக நீடித்து வந்த போர் ஒரு புதிய உடன்பாட்டை எட்டியுள்ளது.
அதன்படி முதற்கட்டமாக ஐம்பது பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும் என்றும், அதற்கு பதிலாக நான்கு நாட்கள் சண்டை நிறுத்தம் அமலுக்கு வரும் என்றும் அமெரிக்காவின் உதவியுடன் கத்தார் முன்னெடுத்த மத்தியஸ்தம் ஒரு இடைக்கால நிவாரணத்தை பெற்றுக் கொடுத்துள்ளது.

இந்தநிலையில், ஹமாஸ் மீதான போரை 4 நாட்களுக்கு நிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். காசாவில் பிணைக்கைதிகளாக உள்ள 50 பெண்கள்குழந்தைகளை விடுவிப்பதற்கு ஈடாக நான்கு நாள்கள் சண்டை நிறுத்தப்படும் என்றும் இஸ்ரேலியப் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 நாட்கள் போரை நிறுத்த இஸ்ரேல் மந்திரிசபை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதனால் ஹமாஸ் விரைவில் பிணைக்கைதிகளை விடுவிக்கும் என எதிர்பார்க்கலாம். 50 பிணைக்கைதிகள் விடுவிக்கப்படும் அதே வேளையில், இஸ்ரேல் சிறையில் இருந்து 150 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
ஹமாஸ்,அமைப்பு சுமார் 240 பிணைக்கைதிகளை பிடித்து வைத்திருப்பதாக நம்பப்படுகிறது. கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது அது திடீர் தாக்குதலை நடத்தியபோது பிணைக் கைதிகளைப் பிடித்துச் சென்றது.
இந்தத் தாக்குதலில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து இஸ்ரேல் தொடர்ந்து காஸாவைத் தாக்கியதில் பாலஸ்தீனர்களின் தரப்பில் 12,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ஹமாஸ் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.




















