கோலாலம்பூர்:
கடந்த ஜூன் முதல் இம்மாதம் வரை நாடு முழுவதும் 300,000 க்கும் மேற்பட்ட நபர்கள் மடானி மருத்துவத் திட்டத்தால் பயனடைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்திம் கீழ், நாடு முழுவதும் உள்ள 2,347 தனியார் சுகாதார நிலையங்களில் 600,000 சிகிச்சை முறைகள் மற்றும் சுகாதாரப் பரிசோதனைகள் இதில் ஈடுபட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா கூறினார்.
“இந்த திட்டம் மக்களுக்கு சுகாதார சேவைகளை மேம்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாகும். இது தவிர ஏனைய முயற்சிகளாக, அலுவலக நேரத்திற்குப் பிறகு நாடு முழுவதும் உள்ள 52 அரசு சுகாதார கிளினிக்குகளின் செயல்பாடுகளை நீட்டிப்பது, 903 சுகாதார கிளினிக்குகளில் MySejahtera விண்ணப்பத்தின் மூலம் ஆன்லைன் சந்திப்பு செயல்முறையை மேற்கொள்ளுதல் போன்றவைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.
சுகாதார கிளினிக்குகளில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து அப்துல் லத்தீஃப் அப்துல் ரஹ்மான் (PN-Kula Krai) கேட்ட கேள்விக்கு அவர் இவவாறு பதிலளித்தார்.