கோலாலம்பூர்:
பல்வேறு குற்றங்களுக்காக, ஜாலான் ஈப்போவில் இன்று குடிநுழைவுத்துறையினரால் நடத்தப்பட்ட சோதனையில், ஒரு பெண் உட்பட மொத்தம் 34 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.
மளிகைக் கடைகள் மற்றும் உணவகங்கள் போன்ற வணிக வளாகங்களைக் குறிவைத்து, ‘Op Belanja’ மற்றும் ‘Op Selera’ எனப் பெயரிடப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளின் போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் வான் முகமட் சௌபீ வான் யூசோஃப் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்கள், 30 முதல் 63 வயதுடையவர்கள் என்றும், அனைவரும் நேபாளம், வங்காளதேசம், பாகிஸ்தான், இந்தோனேசியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் சொன்னார்.
“அவர்களில் சிலர் மளிகைக் கடைத் தொழிலாளர்களாகவும், சமையல்காரர்களாகவும், முடிதிருத்தும் பணியாளர்களாகவும், உணவகப் பணியாளர்களாகவும் வேலை செய்கிறார்கள்,” என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.





















