புலம் பெயர்ந்தவர்களுக்கு எதிராக போராட்டம்; அயர்லாந்தில் பரபரப்பு!

யர்லாந்து நாட்டில் மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தியதில் 5 குழந்தைகள் காயமடைந்ததைக் கண்டித்து, புலம் பெயர்ந்தோருக்கு எதிரானவர்கள் நடத்திய போராட்டம் பெரும் வன்முறையில் முடிவடைந்தது.

அயர்லாந்து நாட்டின் தலைநகர் டப்ளினில், நேற்று காலை பள்ளி ஒன்றிற்குள் புகுந்த மர்மநபர் ஒருவன், கையில் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக பார்ப்பவர்களைக் குத்தியுள்ளான். இந்த சம்பவத்தில் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், போலீஸார் விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த 2 குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக இருந்து வருகிறது. இதனிடையே இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் புலம்பெயர்ந்தவர் என்ற தவறான தகவல், சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதையடுத்து புலம் பெயர்ந்தோருக்கு எதிரான மனநிலை கொண்ட ஐநூறுக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு, டப்ளினின் முக்கிய வீதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் பட்டாசுகளை கொளுத்தி பாதுகாப்பிற்காக நின்றிருந்த போலீஸார் மீதும் வீசியதால், பெரும் வன்முறை வெடித்தது.

இந்த வன்முறையின் போது, 11 போலீஸ் வாகனங்கள், 3 பேருந்துகள், ஒரு டிராம் ரயில் ஆகியவை தீக்கிரையாக்கப்பட்டன. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு பிரதமர் லியோ வராட்கர், இது மிகவும் அவமானகரமானது என தெரிவித்துள்ளார். புலம் பெயர்ந்தோர் மீதான இத்தகையை வன்மச் செயல்களை ஏற்க முடியாது எனவும், இதனைக் கட்டுப்படுத்த உடனடியாக புதிய சட்டங்கள் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக 34 பேரை கண்டறிந்துள்ள போலீஸார், அவர்களை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளனர். அயர்லாந்து நாட்டில் இத்தகையை வன்முறைகள் புதிது என்பதோடு, சமீப காலமாக ஒரு மிகச்சிறிய குழுவினர் வெளிநாடுகளில் இருந்து வந்து அயர்லாந்தில் குடியேறியவர்கள் மீது வன்மத்துடன் நடந்து கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here